என் இதயமே ..உன் இதயத்தில்
உயிராய்
உறைந்திருக்க வேண்டும்

உன் விழிகளில்
பார்வையாய்
ஒளி பெற வேண்டும்

உன் இதழ்களில்
மொழிகளாய்
ஒலி பெற வேண்டும் 

உன் கரங்களில்
காதலான சிறு குழந்தையாய்
தவழ வேண்டும்

உன் கூந்தலில்
தினம் நீ சூடும் மலராய் 
மலரவேண்டும்

உன் நிழலாய்
நீங்காமல் உன்னுடனே
நடக்கவேண்டும் ..~அன்புடன்  யசோதா காந்த் ~

அரசாங்க வேலை ....
அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு
அல்லும் பகலும் கஷ்டப்பட்டு

ஓடி ஓடி தேர்வு எழுதி
கனவுக்குள் கோட்டை கட்டி

சுப்பையா கூப்பிட்டான்
சுண்ணாம்பு அடிக்க

கண்னையா அழைத்தான்
காட்டு வேலை செய்ய

மிராசுதாரும் கூப்பிட்டார்
அரிசி ஆலையில் மேற்பார்வை பார்க்க

தரகர் மாமா ஆலோசனையோ
தங்கமா ஒரு பெண்ணை கைபிடிக்க

வேண்டாம்னு ஒதுக்கி வச்சேன்
மேற்படி சொன்ன எல்லாவற்றையும்

அப்பாவும் என்னை பேரு மறந்து
ஆசையா கூப்பிட்டாறு தண்ட சோறு  என்று


அம்மாவும் வெட்டிப்பயல் நீ என்று
வாய் நிறைய  வசைபாடுவாள்


வேலைவாய்ப்பு அலுவலகம்  படைகள்எடுத்தும்
விண்ணப்பங்களும் கால்செருப்பும் வீணாய் போனதே

கூலிவேலை செய்ய தடைபோடும்
பட்டம் படிச்ச தலைக்கன இருளுக்கு
எந்த விளக்காலும்
வெளிச்சம் தர முடியலையே .. 
~அன்புடன் யசோதா காந்த் ~

தாய்மை ..
என் பெண்மையின் 
அர்த்தம் தெரிந்த நேரம் 

அனைவரும் என்னை 
பாதுகாத்த நேரம்

கவலை கண்ணீர் 
நின்று போன நேரம்  

ஒவ்வொரு நிமிடத்தையும் 
நான் ரசித்த நேரம் 

குமட்டலையும் 
வாந்தியை  வரவேற்ற நேரம் 

ஆசைப்பட்ட உணவுகளை 
வெறுத்த நேரம் 

போகுமிடமெல்லாம் 
பெருமை சேர்த்த நேரம் 

கருவின் துடிப்பை உணர்ந்து
மகிழ்ந்த நேரம் ...

என்னவென்று சொல்வேன் ?
தாய்மையின் இனிய பொழுதுகளை ...

~அன்புடன் யசோதா காந்த் ~

என்னவளின் கோபம் ...நெஞ்சை கிழிக்கும் உணர்வுகளை
சொல்லால் சொல்ல முடியவில்லை

நினைவில் நிற்கும் பதிவுகளை
கனவால் கூட அழிக்க முடியவில்லை

நீ கொடுத்த முத்தங்களை
என் நிழலும் கூட மறக்கவில்லை

நம் விரல்கள் பின்னி நடந்ததை
அந்த கடற்கரை மணலும் மறுக்க வில்லை

உன்னை தவிர வேறொரு பெண்ணை
என் கண்கள் காணபோவதில்லை

கோபம் எறிந்து வந்துவிடு கண்ணே
சொர்க்கம் நமக்கு தூரமில்லை

~அன்புடன் யசோதா காந்த்~

என்னவளுக்காய் ....
மழை அது பொழியட்டும் பொழியட்டும்
மங்கை அதில் ஆனந்தமாய் நனைவதால்

வெயில் அது அடிக்கட்டும் அடிக்கட்டும்
என்னவள்  மாடியில் துணி உலர்த்துவதால்

தென்றல் அது வீசட்டும் வீசட்டும்
என் கண்மணி மேனி குளிர்விப்பதால்


பூக்கள் அது மலரட்டும் மலரட்டும்
பூவை அவள் பூந்தோட்டத்தில் உலவுவதால்

அருவியில் நீர் கொட்டட்டும் கொட்டட்டும்
அழகி அவள் அழகாய் நீராடுவதால்

பறவைகள் இசை பாடட்டும் பாடட்டும்
கன்னி  அவள் கண்மூடி ரசிப்பதால்

இந்த இயற்கை அனைத்துமே ஒன்றாய்
என்னுயிர்  காதலிக்காய் இயங்கட்டுமே


~அன்புடன் யசோதா காந்த்` ~

நேருக்கு மாறாய் .....நிலவுக்கு குளிரில்லை
வானவில்லில்  வண்ணங்களும்  இல்லை

பூவுக்கு வாசமில்லை
தேனுக்கு சுவையும் இல்லை

சூரியனுக்கு ஒளியில்லை
இரவுக்கு இருளும் இல்லை

மனிதர்களுக்குள் காதல் இல்லை
எனக்குள் நீயும்இல்லை

உனக்குள் நானில்லை
உடலில் உயிரும் இல்லை

நீ என்னை விட்டு பிரிந்த கணம் முதல்
அனைத்தும் நேருக்கு மாறாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~

மிருகக் காட்சி சாலை ....மனிதர்கள் நாம்
வாய்பேச தெரிந்தவர்கள் 
கொடி பிடிக்கவும் கோஷம் போடவும்
தீயதை எதிர்க்கவும் ,தட்டி கேட்கவும்
துணிந்து நிற்கிறோமே


மிருக காட்சி சாலையிலோ
உயிர் ஜீவிகள் அனைத்தையும்
கூண்டுகளில் அடைத்தும்
பாதி வயிற்று உணவு கொடுத்தும்
காட்சி பொருளாக்கி
காசாக்கி கொண்டு இருக்கிறோமே..
அவைகளும் தீர்மானித்தன
அடுத்த பிறவியில்
நம்மை கூண்டில் அடைத்து
பார்வையாளர்களாக அவைகளுமாம்


~அன்புடன் யசோதா காந்த்~

இறைவன்....

உருவம் இல்லாதவனே
உலகை படைத்தவனே  
உயிர்களை காப்பவனே
வரங்கள் தருபவனே
துன்பம் துயர் துடைப்பவனே
தடைகள் அகற்றி தயை காட்டுபவனே 
ஆயுள் தந்து ஆசி செய்பவனே
நிழல் போல் துணையானவே
ஆபத்தில் அடைக்கலம் தருபவனே
நல்வழி நாளும் நடத்துபவனே
எல்லாம் வல்ல இறைவனை தொழுதே
இன்புற வாழ்வோம் இவ்வுலகிலே ! 

~ அன்புடன் யசோதா காந்த் ~

கிளிப்பிள்ளை .............


வார்த்தைகளை தொகுத்து வரிகளாக்கி
கவிதைகள் புனைந்து
கவிஞன் ஆகும் ஆசை எனக்கு

முற்றத்து மாமரம் வந்துபோகும்
பச்சை கிளி ஒன்று
செந்தமிழ் கவி கேட்க
ஜன்னலோரம் வந்தமர்ந்தது
பிழைகள் இருப்பின் சொல்லித்தருவேன் என
நான் வரைந்த வரிகளை
வாசிக்க சொன்னது

கிளிக்கென்ன தெரியும்
இலக்கணமும் இலக்கியமும் என
மனதில் எள்ளி நகைத்து சொல்ல தொடங்கினேன்
வார்த்தைகளின் பஞ்சத்தால்
ஒரேபோலான வரிகளே என் கவிதையில்


கோபம் கொண்ட பச்சை கிளியோ
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை நீ என சொல்லி
சிறகடித்து பறந்து சென்றது

மீண்டும் மீண்டும்
திருத்தமுயன்றும்  தோற்று போகிறேன்
சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாய் நான்

~அன்புடன் யசோதா காந்த் ~