என் இதயமே ..உன் இதயத்தில்
உயிராய்
உறைந்திருக்க வேண்டும்

உன் விழிகளில்
பார்வையாய்
ஒளி பெற வேண்டும்

உன் இதழ்களில்
மொழிகளாய்
ஒலி பெற வேண்டும் 

உன் கரங்களில்
காதலான சிறு குழந்தையாய்
தவழ வேண்டும்

உன் கூந்தலில்
தினம் நீ சூடும் மலராய் 
மலரவேண்டும்

உன் நிழலாய்
நீங்காமல் உன்னுடனே
நடக்கவேண்டும் ..~அன்புடன்  யசோதா காந்த் ~

அரசாங்க வேலை ....
அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு
அல்லும் பகலும் கஷ்டப்பட்டு

ஓடி ஓடி தேர்வு எழுதி
கனவுக்குள் கோட்டை கட்டி

சுப்பையா கூப்பிட்டான்
சுண்ணாம்பு அடிக்க

கண்னையா அழைத்தான்
காட்டு வேலை செய்ய

மிராசுதாரும் கூப்பிட்டார்
அரிசி ஆலையில் மேற்பார்வை பார்க்க

தரகர் மாமா ஆலோசனையோ
தங்கமா ஒரு பெண்ணை கைபிடிக்க

வேண்டாம்னு ஒதுக்கி வச்சேன்
மேற்படி சொன்ன எல்லாவற்றையும்

அப்பாவும் என்னை பேரு மறந்து
ஆசையா கூப்பிட்டாறு தண்ட சோறு  என்று


அம்மாவும் வெட்டிப்பயல் நீ என்று
வாய் நிறைய  வசைபாடுவாள்


வேலைவாய்ப்பு அலுவலகம்  படைகள்எடுத்தும்
விண்ணப்பங்களும் கால்செருப்பும் வீணாய் போனதே

கூலிவேலை செய்ய தடைபோடும்
பட்டம் படிச்ச தலைக்கன இருளுக்கு
எந்த விளக்காலும்
வெளிச்சம் தர முடியலையே .. 
~அன்புடன் யசோதா காந்த் ~

தாய்மை ..
என் பெண்மையின் 
அர்த்தம் தெரிந்த நேரம் 

அனைவரும் என்னை 
பாதுகாத்த நேரம்

கவலை கண்ணீர் 
நின்று போன நேரம்  

ஒவ்வொரு நிமிடத்தையும் 
நான் ரசித்த நேரம் 

குமட்டலையும் 
வாந்தியை  வரவேற்ற நேரம் 

ஆசைப்பட்ட உணவுகளை 
வெறுத்த நேரம் 

போகுமிடமெல்லாம் 
பெருமை சேர்த்த நேரம் 

கருவின் துடிப்பை உணர்ந்து
மகிழ்ந்த நேரம் ...

என்னவென்று சொல்வேன் ?
தாய்மையின் இனிய பொழுதுகளை ...

~அன்புடன் யசோதா காந்த் ~

என்னவளின் கோபம் ...நெஞ்சை கிழிக்கும் உணர்வுகளை
சொல்லால் சொல்ல முடியவில்லை

நினைவில் நிற்கும் பதிவுகளை
கனவால் கூட அழிக்க முடியவில்லை

நீ கொடுத்த முத்தங்களை
என் நிழலும் கூட மறக்கவில்லை

நம் விரல்கள் பின்னி நடந்ததை
அந்த கடற்கரை மணலும் மறுக்க வில்லை

உன்னை தவிர வேறொரு பெண்ணை
என் கண்கள் காணபோவதில்லை

கோபம் எறிந்து வந்துவிடு கண்ணே
சொர்க்கம் நமக்கு தூரமில்லை

~அன்புடன் யசோதா காந்த்~

என்னவளுக்காய் ....
மழை அது பொழியட்டும் பொழியட்டும்
மங்கை அதில் ஆனந்தமாய் நனைவதால்

வெயில் அது அடிக்கட்டும் அடிக்கட்டும்
என்னவள்  மாடியில் துணி உலர்த்துவதால்

தென்றல் அது வீசட்டும் வீசட்டும்
என் கண்மணி மேனி குளிர்விப்பதால்


பூக்கள் அது மலரட்டும் மலரட்டும்
பூவை அவள் பூந்தோட்டத்தில் உலவுவதால்

அருவியில் நீர் கொட்டட்டும் கொட்டட்டும்
அழகி அவள் அழகாய் நீராடுவதால்

பறவைகள் இசை பாடட்டும் பாடட்டும்
கன்னி  அவள் கண்மூடி ரசிப்பதால்

இந்த இயற்கை அனைத்துமே ஒன்றாய்
என்னுயிர்  காதலிக்காய் இயங்கட்டுமே


~அன்புடன் யசோதா காந்த்` ~

நேருக்கு மாறாய் .....நிலவுக்கு குளிரில்லை
வானவில்லில்  வண்ணங்களும்  இல்லை

பூவுக்கு வாசமில்லை
தேனுக்கு சுவையும் இல்லை

சூரியனுக்கு ஒளியில்லை
இரவுக்கு இருளும் இல்லை

மனிதர்களுக்குள் காதல் இல்லை
எனக்குள் நீயும்இல்லை

உனக்குள் நானில்லை
உடலில் உயிரும் இல்லை

நீ என்னை விட்டு பிரிந்த கணம் முதல்
அனைத்தும் நேருக்கு மாறாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~

மிருகக் காட்சி சாலை ....மனிதர்கள் நாம்
வாய்பேச தெரிந்தவர்கள் 
கொடி பிடிக்கவும் கோஷம் போடவும்
தீயதை எதிர்க்கவும் ,தட்டி கேட்கவும்
துணிந்து நிற்கிறோமே


மிருக காட்சி சாலையிலோ
உயிர் ஜீவிகள் அனைத்தையும்
கூண்டுகளில் அடைத்தும்
பாதி வயிற்று உணவு கொடுத்தும்
காட்சி பொருளாக்கி
காசாக்கி கொண்டு இருக்கிறோமே..
அவைகளும் தீர்மானித்தன
அடுத்த பிறவியில்
நம்மை கூண்டில் அடைத்து
பார்வையாளர்களாக அவைகளுமாம்


~அன்புடன் யசோதா காந்த்~

இறைவன்....

உருவம் இல்லாதவனே
உலகை படைத்தவனே  
உயிர்களை காப்பவனே
வரங்கள் தருபவனே
துன்பம் துயர் துடைப்பவனே
தடைகள் அகற்றி தயை காட்டுபவனே 
ஆயுள் தந்து ஆசி செய்பவனே
நிழல் போல் துணையானவே
ஆபத்தில் அடைக்கலம் தருபவனே
நல்வழி நாளும் நடத்துபவனே
எல்லாம் வல்ல இறைவனை தொழுதே
இன்புற வாழ்வோம் இவ்வுலகிலே ! 

~ அன்புடன் யசோதா காந்த் ~

கிளிப்பிள்ளை .............


வார்த்தைகளை தொகுத்து வரிகளாக்கி
கவிதைகள் புனைந்து
கவிஞன் ஆகும் ஆசை எனக்கு

முற்றத்து மாமரம் வந்துபோகும்
பச்சை கிளி ஒன்று
செந்தமிழ் கவி கேட்க
ஜன்னலோரம் வந்தமர்ந்தது
பிழைகள் இருப்பின் சொல்லித்தருவேன் என
நான் வரைந்த வரிகளை
வாசிக்க சொன்னது

கிளிக்கென்ன தெரியும்
இலக்கணமும் இலக்கியமும் என
மனதில் எள்ளி நகைத்து சொல்ல தொடங்கினேன்
வார்த்தைகளின் பஞ்சத்தால்
ஒரேபோலான வரிகளே என் கவிதையில்


கோபம் கொண்ட பச்சை கிளியோ
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை நீ என சொல்லி
சிறகடித்து பறந்து சென்றது

மீண்டும் மீண்டும்
திருத்தமுயன்றும்  தோற்று போகிறேன்
சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாய் நான்

~அன்புடன் யசோதா காந்த் ~

மழையே போய் விடு .....

அன்புள்ள மழைக்கு

தவம் செய்து கேட்டும்
 பொழிய மறுப்பாயே..

இன்றோ ...

பொழிந்தாய் ..பொழிகிறாய்
இன்னும்  பொழிவாயோ?

உன்னால் பள்ளங்களும் நிறைந்து
குளம் குட்டை ஆனதே

சாலைகள் மூழ்கி
போக்குவரத்து முடங்கி
வாகனங்கள் வெள்ளத்தில்
கப்பல்கள் போலானதே

ஆற்றோர வீதியோர  குடிசைகள்
இருந்த இடம் தெரியவில்லையே

விவசாயம் செய்த பயிர்களெல்லாம்
உயிரோடே அழிந்து போனதே

கிராமத்து பள்ளிக்கூடமும்
ஒழுக்கினால் மூடி கிடக்கிறதே

எங்க அப்பாவும் வேலையின்றி
வீட்டுக்குள் திணறுகிறாரே

முதல் மழையில் நனைந்ததால்
மூக்கும் ஒழுகி சளி பிடித்து ஆட்டுகிறதே


நீ வராவிட்டாலும் தொல்லை
வந்தாலும் தொல்லை

பெய்தது போதும் மழையே
வந்தவழியே போய்விடு
அன்புடன் சண்டையிடும் சண்டைக்காரி

~அன்புடன் யசோதா காந்த் ~

துணை .....முதல் ஐந்தில் ...
              தாத்தா உடன் நடந்தேன்
             மாயா ஜால கதைகள் கேட்டு

இரண்டாம் ஐந்தில் ...
                   அப்பா உடன் நடந்தேன்
                 அவரின் அறிவுரைகள் கேட்டு

மூன்றாம் ஐந்தில் ...
                   அண்ணன் துணையில் நடந்தேன்
                    பயமின்றி துணிச்சல் கொண்டு

நான்காம் ஐந்தில் ...
                  காதலனுடன் நடந்தேன்
                 உலகமே என் வசம் என எண்ணி கொண்டு

ஐந்தாம் ஐந்தில் ...
                காதலனே கணவரானபின் அவருடன் நடந்தேன்
              நான் சாய்ந்து கொள்ளும் சுமைதாங்கி அவரென்று

ஆறாம் ஐந்தில் ...
               நான் பெற்ற மகனுடன் நடக்கிறேன்
              என் வயோதிக காலத்தின் நிழற்குடை இவனே என்று

காலகாலமாய் பெண்களின்
எல்லாவயதிலும் இவர்களே துணையாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~

சம்பாத்தியம் .....தாயின் வறுமை அறிந்து
சில்லறைகள் பல சம்பாதித்தது
வாடகை குழந்தையாய்
வழியோரம் பிச்சை எடுக்கும்
ஆறுமாத  பச்சிளம் குழந்தை .....~அன்புடன் யசோதா காந்த் ~

அழுக்காய் ஒரு தேவதை .....
அன்றும் பேருந்தில்
குட்டி தேவதை ஒன்று 


அழுக்கு ஆடை உடுத்தி
தலை முடிகள் பறந்து கிடக்க


கைகளிலோ பிச்சை தட்டுமாய்
திரைப்பட பாடல் ஒன்றை
பிழையுடன் உரக்க பாடியபடி 


வயிற்றில் அடித்துக்கொண்டு
அங்கும் இங்கும் ஓடி
யாசித்தபடி ...


காதில் தேனாக ஒலித்தது
அந்த குயிலின் குட்டி குரல்பட்டுடை அணிந்து
தலையில் பூக்கள் சூடி
கானமேடை ஒன்றின் மேல் அமர்ந்து
தாளம் தட்டி தலை அசைத்து
இவள் பாடும் அழகை
கண்  முன் நிறுத்தி கண்டேன்

காதருகே அதே குரல்
கண் திறந்த போதோ
மீண்டும் அதே வரிகளை பாடி
என்னருகே  கையேந்தியபடி
அந்த சின்ன அழுக்கு தேவதை

நெஞ்சில் வலியுடன்
சட்டைப்பைக்குள் என் விரல்கள்...

~அன்புடன் யசோதா காந்த் ~

தூது போ தென்றலே ...
எனை அறியாது ..
உன்னை தொடர்ந்தேன்

விழிகளின் வழியே  காதல்
சொல்ல நினைத்தேன்

விலகிவிடுவாயோ என
மெல்ல பயந்தேன்

அன்பினை வார்த்தைகளாக்கி
கடிதம் வரைய நினைத்தேன்

இதயம் தரும் துணிச்சல்
இந்த விரல்களுக்கு இல்லையே

என் காதலை நீ அறிவாயோ
நானும் சொல்லாமல் இருப்பதோ ?

ஒ தென்றலே தூது செல்வாயோ
காத்திருப்பேன் என்னவள் என் மனதறிய

கேட்பாயோ அவளிடம் ...
அவள்நிலைமையும்  எனைபோல் தானோ  என்று ?

நல்ல பதில் நீ தந்தால் தென்றலே
பூந்தோட்டம் பரிசாய்  தருவேன் நான்  உனக்கு


~அன்புடன் யசோதா காந்த் ~

உயிரே .....

மஞ்சள் நிலவே
மார்கழி பூவே

கொஞ்சும் நேரம்
கைகூடி வந்ததே

நெஞ்சம் உனக்காய்
நிலைகுலைந்து தவிக்குதே

நெருங்கி வா என் அழகே
நிலவுக்கு போய்  மகிழலாம்

அருகில் நீ வந்தால்
அகிலமும் மறந்திடுவேன்

ஆருயிரே  அழைக்கிறேன்
 வா ஒர் உயிராய் கலந்திடுவோம்

காலமெல்லாம்  வாழ்ந்திடுவோம்
காதலெனும் தேசத்தில் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

பஞ்சம் பசி ...மண்ணிற்கும் விலையுண்டே
இந்த மனித உயிர்க்கு விலையுண்டா?

குடல் காய்ந்து கருகவா
குடிசையில் பிறந்தோம் ?

மண்ணையும் தின்று பார்த்தோமே
மறுபடியும் பசிக்கிறதே ...

நாடு வளம் பெறுமோ தெரியவில்லையே
ஆனால் எங்களின் சவக்குழிகள் கண்முன் தெரிகிறதே ...

தசைகள் இன்றி தோலும்தான் சுருங்கி போனதே ..
உடலெலும்புகளோ புறம்  ஆனதே ..

முகம்வடிவிழந்து மனித உருவம் மறைகிறதே
வேறேதோ வேற்றுகிரகவாசிபோலானோமே..

~அன்புடன் யசோதா காந்த் ~

வண்ணங்கள் ....புடைவைகள் உடுத்தினேன் உன் வண்ணத்தில்

பூக்களும் சூடினேன் உன் வண்ணத்தில்

புதுவீட்டின் வர்ணமோ உன் வண்ணத்தில்

வாசலில் கோலமோ உன் வண்ண பொடிகளில்

ஏதேதோ  இன்னும் இன்னும்

உன் வண்ணங்களில் ...

எதுவும் அழகில்லை

அழகு வானவில்லே உன் முன்னில்

~அன்புடன் யசோதா காந்த் ~

கூட்டம் கூட்டமாய்....


பூக்களிடம் கதைபேசி  மயக்கி 
தேன் பருக காத்திருக்கும்
வண்டுகள் கூட்டம்கூட்டாய் 

அரண்மனை கருவூலத்  தேனை 
எதிரிகள் களவாடாமல் இருக்க 
வாளோடு   காவல் காக்கும்
தேனீக்கள் கூட்டம் கூட்டமாய்  ... 

வண்ண வண்ண  ஆடைகளோடு 
வானத்தில் வட்டமிட்டு  
சிறகடித்து பறக்கும் 
வண்ணத்து பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் ...


இரவினிலே  தீப்பந்தங்களோடு
போராட்டம் நடத்தும் 
மின்மினி பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் 

உறவுகளுக்கு விருந்து கொடுக்கவும் 
நல்லவையா கெட்டவையோ எதுவானாலும் 
பாட்டு பாடி கூட்டம் கூடும் 
காக்கைகள் கூட்டம் கூட்டமாய் 

ராணுவத்தில் சேர்வதற்க்காய் 
பயிற்சி எடுத்தும் வரிசை நடத்தும் 
எறும்புகள் கூட்டம் கூட்டமாய் 

இத்தனை உயிர்களும் 
கூட்டம் கூட்டமாய் 
தம்முள் ஒற்றுமையாய் 
நாமோ கூடி வாழாது 
வேற்றுமையாய்  ஏனோ ?? 

~ அன்புடன் யசோதா காந்த் ~

கோலங்கள் ....வண்ண வண்ண  கோல மாவெடுத்து
வாசலில் தினமும் கோலமிட்டு
சின்ன சின்னதாய் போடாமல்
வீதியின் பாதிவரை போடுவதேன் ?

கால் கடுக்க நிற்கும் உன்னை
நானும் நெடுநேரம் காண தானே
இட்ட கோலங்கள் அழியாமலிருக்க
எனது விழிகளை அல்லவா
வாசலில் வைத்தேன்

என்னவேண்டும் என்ற தந்தையிடம்
கோல புத்தகங்களுக்கல்லவா
கோரிக்கை வைத்தேன் ..
எண்ணங்களை கோல பொடிகளாக்கி
நம் காதலை அல்லவா
புள்ளி இட்டு கோலமாக்கினேன் ...

அதிகாலை குளிர் தொல்லை  
மார்கழி வரை காக்க மனமில்லை
வந்து விடு  மனதை தந்து விடு

வரும் காலை பொழுதுகளில்  
நம் வாசலில் நான் கோலமிட
உன் கண்களோ அதை நோக்க
இனிய  நினைவுகளாய்  வாழ்ந்திடுவோம்
அழகாய்  அழியா கோலங்களாய்

~அன்புடன் யசோதா காந்த் ~

தண்ணீர் தண்ணீர் ....ஏழை மக்களின் உபயோகத்தில்
கூடுதலாய் நாளிதழ்கள் ..


படிப்பதற்க்காய்  மட்டுமல்ல
கழிவுகளை துடைப்பதற்கும்


குடிப்பதற்கே தண்ணீர் இல்லையாம்
கழுவுவதற்க்கோ? இல்லைவே  இல்லை


தண்ணீர் இருந்தும் ......
நாகரீகம் மேலோங்கியதால் 
வெளிநாடுகளிலோ
கழிவறையில் காகிதங்கள்


தண்ணீர் இல்லாமல்   நம் நாட்டிலோ
இன்றும் கிராமங்களிலும்


கழிவுகளை சுத்தம் செய்வதும்
காகிதங்களே....


~அன்புடன் யசோதா காந்த் ~

ஆனந்தம் ....

கைகள் சிரித்தது ..
வளையல் ஓசையில்

கால்களும் சிரித்தது ..
கொலுசு சத்தத்தில்

நம் மனங்கள் சிரித்தது
மட்டில்லா மகிழ்ச்சியில்

இரவும் சிரித்தது ..
நம் இருவரின் நெருக்கத்தில்
       ~அன்புடன் யசோதா காந்த் ~

நீ எங்கே ...??????

அன்பே நீ எங்கே ?

உன் கொஞ்சும் கிளி பேச்சு ..
நீ சிதறவிட்ட சிரிப்பு
 
நீ அழுத கண்ணீர் 
உன் செல்ல சிணுங்கல் 

பொய்யான உன் கோபம் 
முனங்கும் உன்  மௌனம்
 
மயக்கும் உன் பார்வை 
நம் உயிரின் துடிப்பு 

இன்னும் எனக்குள் பசுமையாய் 
நீ இன்றி என் இதயமோ வெறுமையாய் 

~அன்புடன் யசோதா காந்த் ~

ஓயாத அலைகள்............கடல் அலையே
நீயும் எனை போல்  வழிமேல் விழிவைத்து
யார் வரவை நோக்கி காத்திருக்கிறாயோ ?என் உள்ளின் தவிப்பை
உன்னுள்ளும் காண்கிறேனே 


சலிப்பின்றி  ஓயாமல்
வந்து வந்து செல்கிறாயே 


திரும்பி செல்லும் உன் முகத்திலோ
மீண்டும் வரும் புறப்பாடே..


விட்டு சென்ற காதலன்
மனம் கனிந்து வருவான் என காத்துருகின்றயோ ?


என் கண்ணீர் உப்பு சுவை சிறிதளவே
நீ வடித்த கண்ணீரோ ..
உப்பாகவே மாறுகிறதே 
!


நம் இருவரின் தேடலின் முடிவேன்றோ ?
போய் சேரா ஊர்தேடி பயணமோ
நீயும் நானும் ..................???????????


~அன்புடன் யசோதா காந்த் ~

பிரிவு ...........
நாள் நட்சத்திரம்
ஜாதக பொருத்தம் பார்த்தும்
வேதங்கள் மந்திரம் ஓதியும்
நவீனமுறையில்  பதிவு செய்தும்
சேர்ந்த திருமண பந்தங்களே ..
 
காலம் சில சென்ற பின்
பிரிவென்று வருகிறதே
இறைவன் படைத்த உயிர்கள் அனைத்தும்
இணைந்து வாழதானே ..
ஐயிந்தறிவுகளே ஆனந்தமாய்
கூடி குலாவுகின்றன நன்றாய்
ஆறறிவு உள்ள நாமோ
விட்டு கொடுக்க மறுத்தும்
அன்பு செய்ய மறந்தும்
அவதி படுவதேனோ ?? 
 
மனங்களை ரணங்களாக்கி
விவாதம் பொதிந்த விவாகரத்துக்களே
பிரிந்த பின்போ துயரத்திலே
ஏனோ இந்த நிலைமை
வாழ்க்கை ஒருமுறையல்லவா 
வாழ்ந்திடுவோம் இன்பமுற
வையகத்திலே....

  ~  அன்புடன் யசோதா காந்த்  ~ 

சண்டை காட்சியும் ...அடியாளும்கோழியும் .முட்டைகறியும் சமைத்தாள்
பிள்ளைகளுக்கோ தரவில்லை
ஏனோ தானோ வென உணவு  தந்து
பிஞ்சுகளின் பசியாற்றி தானும உண்டாள்
கணவன் வருகை காத்திருந்து
ஒளித்து வைத்த உணவை தந்தாள்
மனதிலோ மருகி உருகி
இறைவா இவருக்கு சக்தி கொடு என
வேண்டினாள்
திரைப்படங்களில் அடியாள் வேடம்செய்யும் கணவனுக்காய்
~அன்புடன் யசோதா காந்த் ~

நாடோடி ...................


பழக்கடை முதல்
பல கடைகளிலும்
குளிர்ந்தும் வியர்த்தும் 
குறைவின்றி இருந்தேன்  ..

அன்றொருநாள்
பெரியவர்  வாங்கிய பலசரக்கோடு
அடைக்கலமானேன் 
அழையா விருந்தாளியாய் அடுப்படியில் ..
நிம்மதி நீடிக்கவில்லை 
அன்றே  அகதியானேன்
குப்பைத்தொட்டியில் தொடங்கி
அன்றிரவே ஆற்றங்கரை ஓரத்தில் ..

விடியவே இல்லை
வேகமாய் வந்த பெருங்காற்றில் 
பறந்தேன்  பறவை போல் பெருமிதத்தில் .
முடிவு  எங்கோ என நினைத்து
முடியும் முன்  விழுந்தேன்
முள்வேலி ஒன்றில் ...

படபடத்து சிக்கி தவிக்கிறேன்
கொஞ்சம் காயங்களுடன்
நான் மட்டுமல்ல 
அகதிகள் பலர்  என்னைப்போல
விடிவிப்பார் எவருமின்றி 
தொங்கிக்கொண்டு...

இப்படிக்கு
அழிவே இல்லாத பாலிதீன் பை ..~ அன்புடன் யசோதா காந்த் ~


தனிமை .....,,,

பாழடைந்த  கட்டிடத்தில்
தலைகீழாய் வவ்வால் ஒன்று

எங்கோ ஒரு மரத்தில்
பெரிய ஆந்தை ஒன்று

அந்த ஏரிக்கரையில்
சத்தமிடும் தவளை ஒன்று

தெரு மூலையில்
எதையோ பார்த்து குரைக்கும்
கருப்பு நாய் ஒன்று

காரணமே இன்றி
அங்குமிங்கும் குறுக்கே ஓடும்
வெள்ளை பூனை ஒன்று

தனிமையாய் சோக கீதம் பாடும்
சின்ன குயிலொன்று

இவைகளை போல தனிமையில் விட்டத்தை
வெறித்து பார்க்கும்
உனக்காய் தவிக்கும் உயிர் ஒன்று ..

~அன்புடன் யசோதா காந்த் ~

விடைகள் இல்லா வினாக்கள் .....
ஆயிரம் ஆயிரம் துறைகளிலே
ஆதிக்கம் செலுத்துவோரோ
ஆயிரம் ஆயிரமே
ஆள் பலம் பண பலம்
உடையவற்கோ

தரம் இல்லையெனினும்
முதலாய் உயர்பதவிகளில்
கல்வியோ .விளையாட்டிலோ
திறமை உள்ளவரோ
ஏழை என்ற காரணத்தால்
ஏற்றங்கள் எட்டவில்லை
ஏற்றி விடும் ஏணிகளும்
ஏழை அவனுக்கு இல்லை
பட்டங்களும் சான்றிதழ்களும்
வறுமை எனும்
இருண்ட சிறைதனிலே
என்று மாறும் இந்த நிலை ?
விடைகள் இல்லா வினாக்களே ...


~ அன்புடன் யசோதா காந்த் ~

அழகான தேவதைகள் ....................
இது என்ன தேவதைகள் நகரமா ?
பார்க்க ஆயிரம் விழிகள் வேண்டுமோ ?
யாரைத்தான்  வர்ணிப்பது ?

குட்டி குட்டி தேவதைகளும்
அங்கும் இங்குமாய் ...

மூதாட்டிகளும் தேவதைகளே
பிரம்மனுக்கு  ஏன் இந்த ஓரவஞ்சனை ?
இங்கு மட்டும் அழகாய் படைக்க?
சிறுவயதில் படித்திருக்கிறேன்
வானத்து தேவதைகளை
உயரமாய் அழகிய விழிகளோடு ....
இப்போதோ
நேரிலும் காண்கிறேன் ...

அதே தேவதைகளை
ஓவியனாய் நான் இருந்தால்
ஓராயிரம் ஓவியங்கள் தீட்டிருப்பேன்
கவிஞனாய் இருந்தால்
கோடி கவிதைகள் வரைந்திருப்பேன்
அழகான தேவதைகள் ...

   ~ அன்புடன் யசோதா காந்த் ~ 

காற்று...............காற்றே உன் முகங்கள் எத்தனை ?
நீ செய்யும் செயல்களோ எத்தனை எத்தனை ???


சில்லென்றுசெல்லமாய்  வீசி
என்னை குளிர செய்கிறாய் ...

  தாலாட்டி மெல்லமாய் வீசி ...
திண்ணையில் தாத்தாவை  உறங்க செய்கிறாய் ...

மிதமாய் மோகமாய்  வீசி
பூக்களை தலை ஆட்டி சிரிக்க செய்கிறாய் ...

தட தட  சப்தமாய் வீசி
தொட்டிலில் இருக்கும் குழந்தையை அழ செய்கிறாய் ...

சட்டென்று வேகமாய் வீசி
பாவம் கோழிக்கூட்டின் கதவை உடைக்கிறாய் ...

சுழலாய் சுருண்டு வீசி
புழக்கடையில் கழுவ  கிடக்கும்
பாத்திரங்களை  பறந்திட செய்கிறாய் ...

புயலாய் கோபமாய்  வீசி
முற்றத்து தென்னை மரத்தை சாய்த்தே  விட்டாய் ...

சூறாவளியாய் பாய்ந்து வீசி
எங்க வீட்டு மேல் கூரையை தூக்கி செல்கிறாய் ...

புழுதி கற்றாய் குப்பையாய்  வீசி
சுவாசிக்கும் சுவாசத்தை தடை செய்கிறாய் ..

ஆனால் இறைவனை போல
பிராண வாயு வாக இருந்து
எங்களை உயிர் வாழசெயகிறாய் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

ராணுவ வீரன் ..
நல்லதொரு வைகாசி மாதமொன்றில்
நல்ல நேரம் கூடிய பொழுதினில்
வீரமிகு ஆண்மகன் கைகள்தனில்
மூன்று முடிச்சு வாங்கிக்கொண்டேன் கழுத்தினில் ..

தீடீரென அழைப்பு வந்ததில்
புறப்பட்டு சென்றான் சடுதியில்
வீரன் அவன் வேலையோ ராணுவத்தினில்
பிரியா விடைகொடுத்தேன் மௌனத்தில் ...

நான் நடந்து போகின்ற வீதிதனில்
வீரன் மனைவி என கேட்கும் வாழ்த்துதனில்
என் மனமோ பிரிவை மறந்து பெருமிதத்தில்
அவனுடன் சேர்ந்திடுவேன் மற்றொரு பொழுதுதனில்
சாய்ந்திடுவேன் வீரனவன் மார்புதனில்
நாட்டுக்காய் ஈன்றிடுவேன் பிள்ளைகள் பல ஆனந்தத்தில்
வளர்ந்திடுவர் வீரமாய் பாரத தாயின் தாலாட்டுதனில் ..
~ அன்புடன் யசோதா காந்த்  ~

அரசியல் ...அதை தருவோம் இதை தருவோம்
வாழ்க்கை  முறையை மாற்றி விடுவோம்
வசிய வார்த்தைகள் பல கேட்டோம்
சொற்கள்  வீச்சில் நிலை குலைந்தோம்

குழப்பங்களுடன் ஓட்டும் பதித்தோம்
கேட்டவைகள்  கிடைத்திட காத்திருந்தோம்
எதிர் பார்த்ததோ அட்சய பாத்திரம்
கிடைத்ததோ பிச்சை பாத்திரம்

அரசியல் சூதாட்டத்தில் பகடைகளாணோம்
அரசாங்கத்தால் என்றென்றும் ஏமாற்றபட்டோம்

ஒளிவீசும் விடியலுக்காய் விழித்திருப்போம்(???)
~அன்புடன் யசோதா காந்த்~

வானம் ....

நீ எங்கள் பூமி வீட்டின் கூரையல்லவா

உலக நாடுகளை இணைக்கும் பாலமல்லவா

இயற்கை தனை அள்ளி தரும் வாசலல்லவா

இரவு பகலை உணர்த்தும் கடிக்காரமல்லவா
பறவைகளின் விளையாட்டு மைதானமல்லவா


உனை பாடாத கவிஞனும் உண்டோ
வானவில்லில் வர்ணம் காட்டி
வசியம் செய்யும் வல்லபனே

இரவில் உன் அழகை காண
இறைவனும் இறங்கி வருவானே ...


அழகை அள்ளி தெளித்து
நட்சத்திர கோலமிட்டு
திருஷ்டி படாமலிருக்க
நிலவை பொட்டாக்கி...
ஒ வானமே உன்னை
என்னவென்று வர்ணிப்பேன்


~யசோதா காந்த் ~

வாடகை வீடுகள் ......சரியோ ?தவறோ?தெரியவில்லை
மனதின் வலிகளை மறைக்கவில்லை 

நல்லதும் கண்டேனே தீயதும் கண்டேனே
விவரங்கள் அறிந்த நாள் முதலாய்
 
சொந்தமென்று சொல்ல ஒரு வீடு இல்லை
அவ்வப்போது சொந்தமாய்
வாடகை வீடுகள்தானே...

மாறி மாறி குடி கொண்டோம்
வீடுகளை மட்டுமல்ல
கல்விகூடங்களையும்தானே 

புது புது மனிதர்கள் அறிமுகமாய்
நண்பர்கள் கூட்டம் தாராளமாய்..
 
தடைகளோ எங்களுக்கு ...
வாழும் வாழ்கையிலும்
வசிக்கும் வீடுகளிலும்..
.
சுவரில் ஆணி அடிக்க தடை
பத்து மணிக்கு மேல்
விளக்கு எரிக்க தடை 

உரக்க பேசி சிரிக்க தடை
சொந்த பந்தங்கள் வருவதிலும் தடை 

வாளி தண்ணீர் ஒன்றுக்கு மேல்
குளிக்க தடை 

சில தடைகளை சொல்வதற்கே
எனக்குள் வெட்க தடை...

சரியாய் வாடகை பணம் கொடுத்தும் நாங்கள்
ஏனோ ஆனோம் நிரந்தர அடிமைகள்
ஒவ்வொரு வாடகை வீடுகளிலும் ..

~ அன்புடன் யசோதா காந்த் ~

எனக்குள் ஒரு தேடல்.....வாழ்கையில் அவசர ஓட்டத்தின் நடுவில்
வாழ்ந்ததையும் தேடலாய்
தேடல் எ
ன்பதா ? ஆசை என்பதா ?
தீராத ஏக்கம் என்பதா ?
கண்கள் மூடி கிடக்கும் நேரம்
பின்னோக்கியே ஓடும் மனம் ..

ஆரம்ப பள்ளியின் ஆசிரியர் முகங்கள்
ஒன்றாய் திரிந்த தோழர்களின் முகங்கள்
உறுதி கொண்டேன்....எனக்குள்
நாளை முதல்
ன்று சேர்க்கவேண்டும்
ஒவ்வொரு வகுப்பிலும் நாங்கள்
எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ...

வாழ்பவர் எத்தனை பேரோ
மறைந்தவர் எத்தனை பேரோ
இல்லை மறந்தவர்தான் எத்தனை பேரோ
முகங்கள் தெரியா பெயர்கள்
பெயர்கள் தெரியா  முகங்கள்
இன்றும் நினைவில்...

தேடுதல் வேட்கை தொடரும்
புகை படங்களையும் ..அவர்களையும்
அந்த இனிய நாட்களையும் ....

~அன்புடன் யசோதா காந்த் ~

கோவில் திருவிழா ....

உள்ளூர் அம்மன்கோவில் திருவிழா
ஊர் மக்களோ ஆர்ப்பாட்டமாய்
பெண்களெல்லாம்  பூச்சூடி பொங்கல் வைக்க
சிறுவர்களோ ராட்டினம் சுற்ற..

இளவட்டங்களும்,முதுவட்டங்களும்
கரகாட்டம் ,ஒயிலாட்டம் வேடிக்கை பார்க்க
வயதான பெண்களோ வில்லுப்பாட்டும் ,,
கதைகளும் கேட்டு இருக்க
கெடா கறி விருந்திற்காய் 
உறவுமுறைகள்  காத்திருக்க

ஒலிபெருக்கியில்
வரி பணத்திற்காய் யாரோ குரல்கொடுக்க
பரபரப்பாய் ,,கோலாகலமாய் கொண்டாட

அமைதியாய் கண்மூடி தழை அசைபோட்டன
பூசாரிக்காய்  காத்திருக்கும்  நேர்ச்சை கெடாக்கள் !

~அன்புடன் யசோதா காந்த்~

ஆயுள் கைதி................

 
 
 
 
 
காளை ஒருவனை கண்டேன்
கண்ட அவனோ  கள்வன்
கோபம் நான்  கொண்டதால்

விழிகள் எனும் சிறைக்குள்
வீழ்த்தி தண்டித்தேன் ...

அவனும் என் தீர்ப்பறிய

நெஞ்செனும் சிறைகூட்டில் விழுந்தான்
என் காதலையே ஆயுள் தண்டனையாய்
நான் தீர்ப்பெழுத
நானும் கள்வனின் காதலி ஆனேன் ...

விரும்பியே நானும்
அவன் மடியில்விழ
அவனோ
தன் பரந்த தோள்களில்

விரிந்த மார்பினில்  அணைத்துகொண்டான்
ஆயுள் கைதியாய் ...
இருவரும் காதல் சிறைக்குள்

இந்த ஜென்மம் தீர்ப்போம் ..

~அன்புடன் யசோதாகாந்த் ~

இரயில் தண்டவாளம்.............
இரவும் பகலும் இருவரும்
மழையிலும் வெயிலிலும்
பனியிலும் குளிரிலும்
புயலிலும் பூகம்பத்திலும்
நூற்றாண்டுகளாய்
நெடுந்தூர பயணம்
ஒருநொடி கூட  விலகாமல்   
இத்தனை இருந்தும்
கை கோர்க்க(சேர்க்க) முடியாமல்
தனி தனியே ...நாங்கள்  
~அன்புடன் யசோதா காந்த்~

போதிமரம் .....


நாட்டிலோ பலவகை மரங்கள்
போதிமரத்திற்கோ புனித கதைகள்
புத்தி வந்து ஆசைகள் களைந்தார் 
புத்த பெருமான்

போதிமரம் தான் காரணம் என்றால்
ஆயிரமாயிரம் புத்தர்கள் எங்கே ??
மரம் ஒன்றும் காரணமில்லை
மனம் ஒன்றே காரணமாய்...

பெண் மண் ஆசை
பொன் பொருள் ஆசை
இவைகள் இல்லா மனிதனும் இல்லை
ஆசைகள் துறக்க போதிமரம் தான்
வேண்டுமென்பதில்லை..

என்றோ ஒருவன் புத்தன் ஆனான்
போதிமரமும் புனிதமாயிற்றே
புத்தனுக்கு ஆசை இல்லை என்று யார் சொன்னது ??
ஆசைகளை துறக்கும் ஆசை இருந்ததால் தானே
புத்தனும் துறவி ஆனான் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

வரம் ..........
இறைவன் வருவான்
வரமென்ன வேண்டும் என்பான் ??
பிறவிகள் இரண்டில் ஒன்று
கேட்பேன் வரமாய்...

தாயுள்ளம் கொண்டவன் அவன்
தயக்கமின்றி தந்திடுவான்...

முதல் வரமாய் ......
கடவுளாய் நான்
மற்றொன்றோ ...............
குழந்தையாய் நான்

உலகின் உயிர்களை நினைத்து
அவைகளுக்கு அனைத்தையும் ஈந்து
ஆனந்தத்தில் ஆழ்த்திடுவேன்
கடவுள் நானென்றால்...

உலகையே மறந்து
கவலைகள் துறந்து
குதுகலிப்பேன் கொண்டாட்டமாய்
ஒன்றுமறியா குழந்தை நானென்றால்
~ அன்புடன் யசோதா காந்த் ~

கருணை இல்லா கற்புக்கரசி...
பத்தினி பெண் நீ என்பதால்
உன்னை தலை வணங்குகிறேன்
மதுரையை நீ எரித்ததால்
உன்மேல் எரிச்சல் அடைகிறேன்...
ஈ எறும்பினை கொல்வதே பாவம் அன்றோ
நீயோ  எத்தனையோ உயிர்களை
இரக்கமின்றி கொன்றாயே
உன் கணவன் ஒன்றும் உத்தமன் இல்லையே
உன்னை விட்டு
மாதவி காலடியில் கிடந்தவன் ஆயிற்றே
ஒரு வேளை
உத்தமனாய் அவன் இருந்திருந்தால்
உலகத்தையே அழித்திருப்பாயோ ???

பெண் என்றால் பேயும் இரங்குமே
இதயமே இல்லாதவளா பெண்ணே நீ ??
புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்
எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே !
~ அன்புடன் யசோதா காந்த் ~

மனம்......
காலைக்கதிரவன்
கண்சிவந்து நிற்க
காரணம் நான் கேட்க
ஏதேதோ அவன் சொல்ல
நேரமும் நகர்ந்தது மெல்ல ..
சுள்ளென்று அவன் சுட்டெரிக்க
சட்டென்று என் மனமும் எரிச்சல் கொள்ள
குளிர்தரும் மழையே நன்று
நீயோ கொடியவன் என்றேன் ..அவனிடம்
புரிந்து கொள்வாய் நீயென எள்ளி நகையாடினான் ..

சிறிது நாட்கள் சென்றதும்
நான் விரும்பிய குளிர்காலம் வந்தது
சில தினங்கள் அனுபவித்தேன் ஆவலாய்
வீட்டின் உள்ளும் புறமும் இதமான குளிர்
இடைவெளி இல்லா அடைமழையும்

நாட்கள் செல்ல செல்ல
அலுத்தது  அதுவும் எனக்கு
மழையினால் வேலைகள் கூட முடங்கி போனது
பகலில் கூட இரவின் சாயல்
மெல்ல தேடியது மனம் உச்சிவெயில் வேண்டுமென்று ..
அடை மழை கூடித்தான் போனது ...
எனக்கு மட்டுமல்ல
என் வீட்டு மிருக  ஜீவன்களுக்கும்
மழை பிடிக்காமல் போனது ..

கண்கள் கிழக்கில்
கதிரவன் வரவை காண
இறைவனை
வேண்டி நின்றது மனம்
வெயிலில் மழையையும்
மழையில் வெயிலையும்
தேடும் மனதை என்னவென்பது ??

~ அன்புடன் யசோதா காந்த் ~

அணைப்பு ...

தாயின் ஆசை யான முதல் அணைப்பு 
தந்தையின் பாசம் நிறைந்த அணைப்பு 
ஆசான் தரும் அறிவின் அணைப்பு 
தெய்வம் தரும் பக்தி அணைப்பு
நண்பன் தரும் ஆறுதல் அணைப்பு
சொந்தங்கள் தரும் அன்பின் அணைப்பு
மேலதிகாரிகளின் கனிவான அணைப்பு
சமுதாயத்தின் பண்பான அணைப்பு
காதலால் வரும் இன்ப அணைப்பு
வயோதிகத்தில் வரும் மரண அணைப்பு
மனிதனின் தொடக்கம் தொடங்கி
முடிவுவரை தொடரும் அரவணைப்புகள்

~ அன்புடன் யசோதா காந்த் ~ 

முத்தம் ...........நான் கொடுத்த முத்தங்கள் எத்தனை
எண்ணிக்கை எனக்கு மறந்து போனது
நீ எண்ணிய என் முத்தங்கள் இனித்ததா ??
எல்லாமே எனக்கு தித்திப்பாய் ..
ஒன்றுக்கொன்று
விஞ்சியும் மிஞ்சியும் ...
கெஞ்சியது என் மனம்
கொஞ்சி மகிழ பூ முத்தங்கள்
இன்னும் வேண்டுமென்று ..

முத்தபோட்டியில்
ஜெயிப்பது நீயா நானா ??
ஜெயிப்பவர்களுக்கு முத்தமே பரிசாய்
இடைவெளி விட்டும் விடாமலும்
இன்ப முத்தங்கள் ..
 

உன்முத்தத்தினை மஞ்சளாய் பூசி
முத்தமழையில் குளிக்கின்றேன்
உன் முத்தத்தால் தானே
என் தாகம் தீர்க்கின்றேன் ..
முத்தத்தால் எனை மூர்ச்சையாக்கி
என் மூச்சை நிறுத்திவிடு ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

கடிதம் ...( வலையும் தொலைபேசியும் வேண்டாமே   )

சொல்ல வந்த கதைகளை
சொல்லி முடித்தேன் கடிதத்தில்
மெல்லமாய் எச்சில் தொட்டு
செல்லமாய் ஒட்டினேன்  தபால் தலையை
என் எச்சில் நனைத்து ஒட்டிய கடிதத்தை
நீரும் எச்சில் துணையோடு தான் பிரிப்பீரோ  ??
நேரில் பகரும் முத்தத்தை  இருவரும்
கடிதத்தில் பரிமாறிக்கொண்டோமோ ?..

தபால் காரன் வரும் வழி பார்த்து
தவம் கிடக்கிறதே கண்கள் இரண்டும்
பதில் கடிதம் வரும்வரைக்கும்
வேலைகள் எல்லாம் வீணாக  கிடக்கிறதே
கடிதம் கண்ணில் கண்ட பின் தான்
மனமும் சொல் பேச்சு கேட்கிறதே  ...

கடிதம் சொல்லும் வரிகள் எல்லாம்
என் காதில் உமது குரலாய் ஒலிக்கிறதே ..
கொஞ்சலும் மிஞ்சலும் தொடர்கிறதே
வஞ்சி நான் உம்பதிலை வாசித்தபின்பும் ..
இரவெல்லாம் உறக்கம் வரும் வரைக்கும்
கடிதத்துடன் அல்லவா கதை சொல்கிறேன் ...
கடிதமும் என் கதை கேட்பதை கண்டு
கண் அயர்ந்து  உறங்கி போகிறேன் ..
விடியும் நாளை புது பொழுதில்
விவரங்களை சொல்ல
விரிவாய் மற்றொரு  கடிதம் எழுத
மனதில் எண்ண அலைகள்
எழுர்ச்சி கொண்டு அடிக்கிறதே ..
தொடரும் இந்த தபால் உறவுகள்
துடிப்புடன் நன்றாய் தொடரட்டுமே ..

~ அன்புடன்  யசோதா காந்த் ~

பாவம் இறைவன் ...
விவசாயி   வீட்டிலோ 
இறைவனுக்கு படையலிட்டும் 
நேர்ச்சைகள் பல நேர்ந்தும்
வேண்டினான் மழை பொழிய .....

வழியோரத்திலோ
நாளிதழ்களை படுக்கையாக்கி
கிழிந்த கோணிப்பைகளை
போர்வையாக்கி
உறங்க காத்திருக்கும் ஏழையோ
இறைவனை வேண்டினான்
மழை  பெய்யக்கூடாதென்று....

இறைவனுக்கும் குழப்பம்
.
~ அன்புடன் யசோதா ~

வங்கி ...

வங்கியில் பணமெடுத்து
வரும் வழியில்
எதேச்சையாய்
ஒவ்வொரு பணத்தினையும்
முகர்ந்து பார்த்தேன் ..
ஒன்றிலுமே வாசனை இல்லை ..

வங்கியின் வாசல் காணாத
அன்னை தரும் பணத்தில்
வாசம் மட்டும் வசமாக குடி இருந்தது ..

மல்லி ஜீரக  கடுகு டப்பாக்கள் தான்
அன்னை பணத்திற்கு  வங்கியாய் இருந்தது
அவள் கைகளில் புழங்கிய பணத்திற்கும்
வாசனையை  விதவிதமான வாரி தந்தது ..

இன்று என் கைகளிலோ
வாசனை இல்லா
சலவைத்தாள்களாக பணம் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

உலகமே நீயாய் ..      

என்னுள் தோன்றும் எண்ணமாய்
அதை எழுதும் எழுத்தாய்

வார்த்தைகளின் வடிவமாய்
நான் படிக்கும் வேதமாய்

உன் குரல் காதில் ஒலியாய்
கண்களில் உன் முகம் ஒளியாய்

உனை பிரிந்த நேரம் முள்ளாய்
சேர்ந்த நேரமோ சொர்க்கமாய்

நடக்கையில் என் நிழலாய்
நெஞ்சினுள் எப்போதும் நினைவாய்

உன் அணுக்களால் உருவான உருவமாய்
அன்பே நீ என் ஆன்மாவாய்

ஒரே உடலுமாய் ............
ஒரே உயிருமாய் .............
உலகமே எனக்கு நீயாய் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~