எல்லாம் அழகே .........





மலைகளில் தெரியும் மந்தாரம்
சிலைகளில் தெரியும் மௌனம்

பேசும்போது விழும் வார்த்தைகள்
பேசாத போது விழுங்கும் உணர்ச்சிகள்

வளர்ந்து ஒளி வீசும் பிறை அழகு
தேய்ந்து மறைந்த நிலவழகு

பல் முளைக்கா மழலை சிரிப்பு
பல் போன முதுமை நகைப்பு

விழிகளில் காணும் காட்சிகள்
மொழிகளில் காணும் இனிமைகள்


வானுயர்ந்த நீண்ட மரங்கள்
குறுகிய புல் பூண்டுகள்

குளிர் நடுங்கும் பனி காலம்
கோடை தரும் கொதிப்பு

ஆறறிவு மனிதனும்
ஐந்தறிவு ஜீவன்களும்

இறைவன் படைப்பில் ...காணும்
எல்லாம் அழகே ...
~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

ஈகோ

விட்டு கொடுக்கும் எண்ணம் 
 எள்ளளவும் இல்லையே என்னிடம்
பிடிவாதம் ஒன்றே...தொடரும் 
தொடர்கதையாய் ..
பேசி தீர்க்கும் விஷயத்திற்கெல்லாம் 
பேசாமல் இருந்து பெரிதாக்கி ..
நான் தொலைத்த உறவுகள் 
மீண்டும் கிடைக்குமோ ?
கொஞ்சி மகிழ்ந்த ,
ஆறாம் வகுப்புதோழி 
எனக்காய் அழுத .
எட்டாம் வகுப்பு கமலா 
எதையும் எனகாய்  செய்யும் 
கல்லூரி நட்பு மீனா 
இன்னும் எத்தனை எத்தனை 
நடப்புக்களை நான் இழந்தேன் 


பாழாய் போன ஈகோ வந்திராவிட்டால் ....
இன்று இருப்பார்ள் என் அருகே
என் உயிர் தோழிகள்  ..


பாழும் ஈகோ நட்பிடம் கூட
விலை பேசி நிற்கிறதே ...
இன்றுவரை எனக்குள் ........
~ அன்புடன் யசோதா காந்த்~


தேடல் .....






ஒன்றாம் வகுப்பில் கிடைத்த சிலேட்டு
இரண்டாம் வகுப்பில் தொலைத்த பென்சில்
மூன்றாம் வகுப்பில் கிடைத்த நோட் புக்
நான்காம் வகுப்பில் தொலைத்த பேனா
ஐந்தாம் வகுப்பில்  கிடைத்த ஜாமன்ட்றி பாக்ஸ்
ஆறாம் வகுப்பில் தொலைத்த கட்டுரை நோட்
ஏழாம் வகுப்பில் கிடைத்த லீடர் பதவி
எட்டாம் வகுப்பில் தொலைத்த புது வாட்ச்
ஒன்பதாம் வகுப்பில் கிடைத்த உயிர் தோழி
பத்தாம் வகுப்பில் தொலைத்த ஹால் டிக்கட்
பதினொன்னாம்  வகுப்பில் கிடைத்த லவ் லெட்டர்
பனிரெண்டாம் வகுப்பில் தொலைத்த பள்ளி வாழ்க்கை
கல்லூரி  போன பின்பும் ஞாபகத்தில்..

கல்யாணம் ஆன  பின்போ
கிடைத்ததையும் தொலைத்ததையும்
தொலைந்து போய் தேடுகிறேன்
இன்று வரை...

~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

வயோதிகம் .....












வாலிபத்தின் கடைசி நாட்களாய்
கடந்தவைகளை திருப்பிப்பார்க்கும் தருணமாய்
ஊன்றுகோலே மூன்றாம் காலாய்
பகைவனை கூட நண்பன் ஆக்கும் பக்குவமாய்
மனம் தெளிந்த நீரோடையாய்
நல்லவைகள் மட்டும் நாடும் குணமாய்
ஆசைகளை துறந்து ஞானியாய்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடாய்
அன்பு மட்டுமே தாரக மந்திரமாய்
ஆதரவை நாடும் அப்பாவியாய்
இறைவனடி சேரும் நாளை எண்ணி தவிப்பாய்
மழலை மனதின் மொத்த உருவமாய்
வயோதிகம் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~

சினிமா........








இது ஒரு கனவு தொழிற்சாலை
அதிர்ஷ்டம் இருப்பவர் அரங்கேருவர்
இல்லாதவரோ அங்கலாய்ப்பார்

நட்சத்திரங்களுக்கோ
இதுவே உயிர் மூச்சு
நமக்கோ இதுவே பெரும்பேச்சு ...
கைக்கெட்டா தூரத்தில் கலர் வானம்
அதில் மின்னும் நட்சத்திரங்களோ கலைஞர்கள்
ஏற்றி விடும் ஏணிப்படிகளாய் மக்கள்
ஜெயிப்பவர் ஏராளம்
தோற்பவரும் தாராளம்
என்றும் வெற்றி கொடி நாட்டட்டும்
வாழ்த்திடுவோம் வாருங்கள் ! ...
தொடரட்டும் ...தொடரும்
இந்த தொடர் கதைகள் ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

என்னவன்....






என்னவன்
***********

என்னை சிந்திக்க செய்தவன்
என்னை கவி எழுத செய்தவன்
என் கவிதைகளின் கருவாய் ஆனவன்
என் மனம் அறிந்தவன்
என்னை அணு அணுவாய் ரசித்தவன்
எனக்கு முகவரி தந்தவன்
என் பெண்மையை நான் உணர செய்தவன்
என் நிழலாய் அவன்
என் நிஜமாய் அவன்
என்றும் என் துணையாய் அவன்
என் முதலாய் ....... முடிவாய்
என்றும் என்னவனாய் அவன் !..
~ அன்புடன் யசோதா காந்த் ~

மார்கழி பனி .






அதிகாலை இங்கு வந்து
பவள முத்துக்களை விதைத்தது யார்?
அள்ளி பொருக்க மனம் ஆசை படுகிறதே
துள்ளி நடக்கும் பாதங்களில்
சின்னதாய் குளிர் சுகம் பரவுகிறதே ...
புல்பூண்டுகளும் ..செடிகொடிகளும்
தலை குளித்து முடித்த பின்
தலை துவட்ட மறந்தனவோ?
கதிரவன் வருவான் ..
தலை காய்த்து விடுவான் என
வானம் நோக்கி ...நேரம் பார்த்து ...
காத்திருக்கின்றனவோ?
நானும் கண் மூடி காத்திருக்கிறேன்
கதிரவனின் கணைகளாய்
எனை அணைக்கும் காதலனை
எதிர் நோக்கி ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

மலர்களே...


பூக்களுக்குள்ளும்
*******************
மயக்குகிறேன் நறுமணத்தால்
கொஞ்சலுடன் .. மல்லிகை பூ

வசீகரிகிறேன் என் நிறத்தால் ..
செல்லமாய் கனகாம்பரம் பூ

மரியாதையும் சிறப்பும்
அழகும் எனக்கே எனக்கே ....
கர்வத்துடன் .. ரோஜா பூ

பூஜைக்காய் பிறந்தவள் நான் ....
அழகாய் அரளிபூ

வாடாமல் வாழ்வேன் நான் ...
வாதிட்டது வாடாமல்லி பூ

அபூர்வ வாசனை என்னுடையது ...
மயக்கத்துடன் மரிகொளுந்து

அலங்கரிப்பதே எங்கள் வேலை ...
சாமர்த்தியமாய் ..
சாமந்தி ..செவ்வந்தி பூக்கள்

ஏழூரும் வீசும் என் வாசம் ..
பொறாமையோடு பிச்சி பூ

என்றுமே அழகாய் நாங்கள் ...
ஏக்கத்தோடு காகிதபூக்கள்

மந்திர வாசனை எனக்கே ....
சிணுங்கலோடு மனோரஞ்சிதம் பூ

பல நிறங்களில்..நாங்கள் .....
கொஞ்சலோடு டிசம்பர் பூக்கள்

பனிரெண்டு வருடத்துக்கு
ஒருமுறை பூப்பவள் நான் ...
கோபத்தோடு குறிஞ்சு பூ

மேலும் மேலும் ........பலபூக்கள்
முடிவில்லை விடையில்லை...
தொடரும் போட்டிகள்
பூக்களுக்குள்ளும் ....
~ அன்புடன் யசோதா காந்த் ~ 



வேஷம் ...






ஒவ்வொரு வயதிலும் பலவகை ஆசைகள் 
சொந்தங்கள் மீது தீராத காதல்கள்  
சேர்ந்திருக்கும் போது பூத்திடும் மகிழ்ச்சிகள் 
பிரிவுகளில் தாங்கமுடியாத  துயரங்கள்
காலங்கள் தரும் அனுபவங்கள் 
நிரந்தரமாய் தாக்கும் சோகங்கள் 
அருவியாய் கொட்டும் தத்துவங்கள் 
மறந்த கமைகள் ...
மறுத்த உண்மைகள் ..
கல்யாணம் எனும் பந்தங்கள் 
அங்கேயும் அரங்கேறும் நாடகங்கள் 
சொல்லும் கதைகள் சில
சொல்லாத கதைகள்  பல 
காட்சி முடிந்த பின்னும் 
கலைய மறுக்கும் வேஷங்கள் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~

திரு நங்கைகள்




கடவுளுக்கோ குழப்பமாய்
தாய் தகப்பனுக்கோ
அவமான சின்னமாய்
உடன்பிறப்புகளுக்கோ கேலியாய்
உறவினர்களுக்கோ ...வேடிக்கையாய்
சமுதாயத்திற்கோ கேள்வியாய்
அரசாங்கத்துக்கோ தலைவலியாய்
எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய்
நாங்களும் மனிதர்கள் தானே
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர்
மன்னராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள்
சீரியல் பார்த்து அழுவோர்களும்
இரங்க மனமில்லா எங்களிடம்
தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள்
வேறு யார் வந்துதான் நெஞ்சோரம் சாய்ப்பாரோ
தத்து எடுத்தோம் எங்களுக்குள் பல உறவுகளை
மனம் குமுறுகிறோம்
மனிதாபிமானம் என்றால் ??????????
~ அன்புடன்  யசோதா காந்த் ~

பெண் ....




புதுமை   உலகை படைக்க
புயலாய்  புறப்பட்டவள்
வாழ்க்கை   படகை காக்க
வரம் வாங்கி வந்தவள்
மானிட பிறவிக்கு எல்லாம்
ஆதி உயிர் தந்தவள்
தாயாய் தாரமாய்
சகோதரியாய் நண்பியாய்
ஏற்ற பாத்திரங்களில்
கடமையாய் கருத்தாய்  செய்பவள்
எங்கும் எதிலும்
கருவாய் அவளே பெண் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~

ஆறு...




துள்ளி துள்ளி விழும்
           வெள்ளி மலையருவியின்
செல்ல மகள் நான்
              என் காதலன் கடல் நாயகனை
சேர காடு மலை கடந்து
              நாடு புறங்களில் ஓடி
பாடி ஆடும்
             பருவ மங்கை நான்
என் இரு புறமும்
               செடி கொடிகளும்
பூக்கும் மரங்களும்
               வழித்துணையாய் என்னோடு
கதைகள் பேசி
                 கருத்துகள் பரிமாறி
நடகின்றன ....
                   காதலனை காணப்போகும்
துடிப்பின் வேகம் குறைக்காது
                  எனக்குள்ளே ...
கொஞ்சிகுலவும்    மீன்கள் கூட்டம்
                    ஓரமாய் எட்டிப்பார்க்கும்
மீன்கொத்தி கூட்டம்
                  என் சலசலப்பின் சத்தத்தில்
கவி பாடும் ...
                   பறவைகள் கூட்டம்
என் வழிகளில் ....
                     வண்ண பூக்களின் கூட்டம்
இந்த இயற்கையின் ...
                     அழகை படைத்த
இறைவனை வணங்கி கொண்டே
                    என்னவனை போய் சங்கமித்திடுவேன்

~ அன்புடன் யசோதா காந்த் ~

எமன் ...


உயிரை பறித்து 
உயிரை  நெரித்து
உயிரை   கொன்று
உயிரை தின்று
உயிரை முடித்து
உயிரை குடித்து
எனக்கே எமனான
என் உயிரே
உனை அமுதென்று பருகினேனே ..
விஷமாய் எனை கொல்கிறாயே ?.. .................
~ அன்புடன் யசோதா காந்த் ~

அனாதை


பிறக்கும் குழந்தைகள் எல்லாம் 
தவமாய் பிறந்தவர்களா ??
தண்டனையாய் பிறந்தவர்களா ??
எங்களை பெற்றவர்களை
எங்கோ தொலைத்து விட்டோம் ..
 
அள்ளி அணைக்க அன்னை இல்லை ...
அறிவை சொல்ல தந்தை இல்லை ..
கொஞ்சி மகிழ
உடன்பிறப்புகள் இல்லை ..
சொந்தமென்று சொல்ல
உறவுகளும் இல்லை ..
  
எனினும்
எங்களுக்குள் சில நல்ல விஷயங்கள்
ஜாதி மத பேதம் எங்களுக்குள் இல்லை ..
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள்  இல்லை
பொன்னுக்கும்  மண்ணுக்கும் ஆசை இல்லை
புன்னகைக்கு  குறைவில்லை என்றுமே எங்களுக்குள் ...
  
வாழ்க்கையை ஜெயிக்கும் போராட்டத்தோடு
அன்பெனும் ஆதரவை நாடும்
அனாதை விடுதியின்
ஆண்டவன் கைப்பிழைகள்  நாங்கள்................

~ அன்புடன் யசோதா காந்த் ~

காதல் தேவதை




ஒரு இளவேனிற்காலத்தில்
இனியமாலை பொழுதில் ..
மெல்லிய இருட்டில்
தந்திரங்கள் பல கற்ற
மந்திரப் பெண்ணை கண்டேன் ..
கண்களிலே மாயம் காட்டி
நெஞ்சினிலே காயம் செய்தாள்
இவள் மானிட மங்கையோ ?
தேவலோக தேவதையோ ?
நடு நிஷி மோகினியோ ?
இனி ஒரு நாள் வருவாளோ ?
அவள் பெயர் தான் என்னவோ ?...
அந்த பின்னலிட்ட சின்ன கொடியாளை
காலமெல்லாம் காத்திருப்பேன் நான் காண்பதற்கு ...
காதலித்தே அவளை கைப்பிடிப்பதற்கு .................

~ அன்புடன் யசோதா காந்த் ~

திணறல்..




புகைப்படங்களில் உனை
கண்ணிமைக்காமல் பார்த்திருந்தேன்
நேரில் பார்த்த போதோ
வெட்கம் திரைகளாக
விழிகள் மூடிக்கொண்டதே ...


நான் உன்னோடு பேச
ஆசைப்பட்டபோதோ
நான்கு குணமும் தடுக்கிறதே ...
ஆசைகளை
அணை போட முடியாமல்
மனம் ஆகாயத்தில் சிறகடிக்க
உன் மூச்சு காற்றை நான் சுவாசிக்க
இங்கே ஒரு மூச்சு திணறல் போராட்டம் நடக்கிறதே...
காதலை அடக்க காதலால் தான் முடியுமே ???.................

~ அன்புடன் யசோதா காந்த் ~

அண்ணன் ...


ஒரு கொடியில் மலரவில்லை 
தொப்பிள்கொடி உறவுமில்லை
ரத்த பந்த சொந்தமில்லை
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இன்பத்தில்  குதூகலிக்க .
துவண்ட பொழுதில் தூக்கி நிறுத்தவும்
என் உடன் பிறப்பாய்
எங்கிருந்தோ வந்தான்
அண்ணன் உன் துணை நான் என்றான் ...
  
அண்ணனே ஆலமரமாய் நீ எனக்கு
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறேன் .. 

~ அன்புடன் யசோதா காந்த் ~
  
(எனது உடன் பிறவா அண்ணன் ஒப்பிலியன் பாலு அவர்களுக்காக ... ) 

மறந்து விடு...



உறக்கமில்லா இரவுகளும் 
கலங்கி தவித்த நினைவுகளும் ..
போதும் ..போதும் .. .
மறந்து விட்டேன்  உன்னை ..
மறந்து விடு என்னை ..
விட்டு  விடு என்னை
தொடராதே  என்னை ..
நிம்மதியை தேடி  என் பயணம்
தொடரட்டும் தனியே  ....
சிறகடிக்கும் பறவையாய் .................

~ அன்புடன் யசோதா காந்த் ~  

அன்பே..



அன்பே உன் கண்கள்
   எனும் சிப்பிக்குள்
முத்தாய் இருக்கும் என்னை
   ஒருவரும் கன்னமிடாமல்
கண் மூடி வைத்துக்கொள் ......

~ அன்புடன் யசோதா காந்த் ~ 

நீ நான் ...



பூவாய் நீ
அதில் புதைந்த மகரந்தமாய் நான்
மகரந்தமாய் நீ
அதில் மயங்கும் வண்டாய் நான் ..

கவிதையாய் நீ
அதில் கலந்த வரிகளாய் நான்
வரிகளாய் நீ
அதை வடித்த கவிஞனாய் நான்

வானவில்லாய் நீ
அதில் வண்ணங்களாய் நான்
வண்ணங்களாய் நீ
அதை தீண்டும் தூரிகைகளாய் நான்

கானங்களாய் நீ
அதில் கலந்த ராகங்களாய் நான்
ராகங்களாய் நீ
அதை இசைக்கும் ஒலிகளாய் நான் ..

புல்லாங்குழலாய் நீ
அதை மீட்டும் உதடுகளாய் நான்
உதடுகளாய் நீ
அதை மூடும் உதடுகளும் நான்

வாய்க்காலாய் நீ
அதன் வரப்போர செடிகளாய் நான்
செடிகளாய் நீ
அதன் உயிர் வேர்களாய் நான்

விழிகளாய் நீ
அதன் நடுவே கண்மணியாய் நான்
கண்மணியாய் நீ
அதை தாங்கும் வெண் திரையாய் நான்

மொழிகளாய் நீ
அதில் முதலாம் தமிழாய் நான்
தமிழாய் நீ
தமிழின் அமுதாய் நான்

 
~ அன்புடன் யசோதா காந்த் ~