இரயில் தண்டவாளம்.............




இரவும் பகலும் இருவரும்
மழையிலும் வெயிலிலும்
பனியிலும் குளிரிலும்
புயலிலும் பூகம்பத்திலும்
நூற்றாண்டுகளாய்
நெடுந்தூர பயணம்
ஒருநொடி கூட  விலகாமல்   
இத்தனை இருந்தும்
கை கோர்க்க(சேர்க்க) முடியாமல்
தனி தனியே ...நாங்கள்  
~அன்புடன் யசோதா காந்த்~

போதிமரம் .....






நாட்டிலோ பலவகை மரங்கள்
போதிமரத்திற்கோ புனித கதைகள்
புத்தி வந்து ஆசைகள் களைந்தார் 
புத்த பெருமான்

போதிமரம் தான் காரணம் என்றால்
ஆயிரமாயிரம் புத்தர்கள் எங்கே ??
மரம் ஒன்றும் காரணமில்லை
மனம் ஒன்றே காரணமாய்...

பெண் மண் ஆசை
பொன் பொருள் ஆசை
இவைகள் இல்லா மனிதனும் இல்லை
ஆசைகள் துறக்க போதிமரம் தான்
வேண்டுமென்பதில்லை..

என்றோ ஒருவன் புத்தன் ஆனான்
போதிமரமும் புனிதமாயிற்றே
புத்தனுக்கு ஆசை இல்லை என்று யார் சொன்னது ??
ஆசைகளை துறக்கும் ஆசை இருந்ததால் தானே
புத்தனும் துறவி ஆனான் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

வரம் ..........








இறைவன் வருவான்
வரமென்ன வேண்டும் என்பான் ??
பிறவிகள் இரண்டில் ஒன்று
கேட்பேன் வரமாய்...

தாயுள்ளம் கொண்டவன் அவன்
தயக்கமின்றி தந்திடுவான்...

முதல் வரமாய் ......
கடவுளாய் நான்
மற்றொன்றோ ...............
குழந்தையாய் நான்

உலகின் உயிர்களை நினைத்து
அவைகளுக்கு அனைத்தையும் ஈந்து
ஆனந்தத்தில் ஆழ்த்திடுவேன்
கடவுள் நானென்றால்...

உலகையே மறந்து
கவலைகள் துறந்து
குதுகலிப்பேன் கொண்டாட்டமாய்
ஒன்றுமறியா குழந்தை நானென்றால்
~ அன்புடன் யசோதா காந்த் ~

கருணை இல்லா கற்புக்கரசி...




பத்தினி பெண் நீ என்பதால்
உன்னை தலை வணங்குகிறேன்
மதுரையை நீ எரித்ததால்
உன்மேல் எரிச்சல் அடைகிறேன்...
ஈ எறும்பினை கொல்வதே பாவம் அன்றோ
நீயோ  எத்தனையோ உயிர்களை
இரக்கமின்றி கொன்றாயே
உன் கணவன் ஒன்றும் உத்தமன் இல்லையே
உன்னை விட்டு
மாதவி காலடியில் கிடந்தவன் ஆயிற்றே
ஒரு வேளை
உத்தமனாய் அவன் இருந்திருந்தால்
உலகத்தையே அழித்திருப்பாயோ ???

பெண் என்றால் பேயும் இரங்குமே
இதயமே இல்லாதவளா பெண்ணே நீ ??
புத்தகங்கள் வேண்டுமானால் உனை புகழட்டும்
எனக்கு உன் மேல் என்றென்றும் கோபமே !
~ அன்புடன் யசோதா காந்த் ~

மனம்......




காலைக்கதிரவன்
கண்சிவந்து நிற்க
காரணம் நான் கேட்க
ஏதேதோ அவன் சொல்ல
நேரமும் நகர்ந்தது மெல்ல ..
சுள்ளென்று அவன் சுட்டெரிக்க
சட்டென்று என் மனமும் எரிச்சல் கொள்ள
குளிர்தரும் மழையே நன்று
நீயோ கொடியவன் என்றேன் ..அவனிடம்
புரிந்து கொள்வாய் நீயென எள்ளி நகையாடினான் ..

சிறிது நாட்கள் சென்றதும்
நான் விரும்பிய குளிர்காலம் வந்தது
சில தினங்கள் அனுபவித்தேன் ஆவலாய்
வீட்டின் உள்ளும் புறமும் இதமான குளிர்
இடைவெளி இல்லா அடைமழையும்

நாட்கள் செல்ல செல்ல
அலுத்தது  அதுவும் எனக்கு
மழையினால் வேலைகள் கூட முடங்கி போனது
பகலில் கூட இரவின் சாயல்
மெல்ல தேடியது மனம் உச்சிவெயில் வேண்டுமென்று ..
அடை மழை கூடித்தான் போனது ...
எனக்கு மட்டுமல்ல
என் வீட்டு மிருக  ஜீவன்களுக்கும்
மழை பிடிக்காமல் போனது ..

கண்கள் கிழக்கில்
கதிரவன் வரவை காண
இறைவனை
வேண்டி நின்றது மனம்
வெயிலில் மழையையும்
மழையில் வெயிலையும்
தேடும் மனதை என்னவென்பது ??

~ அன்புடன் யசோதா காந்த் ~

அணைப்பு ...

தாயின் ஆசை யான முதல் அணைப்பு 
தந்தையின் பாசம் நிறைந்த அணைப்பு 
ஆசான் தரும் அறிவின் அணைப்பு 
தெய்வம் தரும் பக்தி அணைப்பு
நண்பன் தரும் ஆறுதல் அணைப்பு
சொந்தங்கள் தரும் அன்பின் அணைப்பு
மேலதிகாரிகளின் கனிவான அணைப்பு
சமுதாயத்தின் பண்பான அணைப்பு
காதலால் வரும் இன்ப அணைப்பு
வயோதிகத்தில் வரும் மரண அணைப்பு
மனிதனின் தொடக்கம் தொடங்கி
முடிவுவரை தொடரும் அரவணைப்புகள்

~ அன்புடன் யசோதா காந்த் ~ 

முத்தம் ...........



நான் கொடுத்த முத்தங்கள் எத்தனை
எண்ணிக்கை எனக்கு மறந்து போனது
நீ எண்ணிய என் முத்தங்கள் இனித்ததா ??
எல்லாமே எனக்கு தித்திப்பாய் ..
ஒன்றுக்கொன்று
விஞ்சியும் மிஞ்சியும் ...
கெஞ்சியது என் மனம்
கொஞ்சி மகிழ பூ முத்தங்கள்
இன்னும் வேண்டுமென்று ..

முத்தபோட்டியில்
ஜெயிப்பது நீயா நானா ??
ஜெயிப்பவர்களுக்கு முத்தமே பரிசாய்
இடைவெளி விட்டும் விடாமலும்
இன்ப முத்தங்கள் ..
 

உன்முத்தத்தினை மஞ்சளாய் பூசி
முத்தமழையில் குளிக்கின்றேன்
உன் முத்தத்தால் தானே
என் தாகம் தீர்க்கின்றேன் ..
முத்தத்தால் எனை மூர்ச்சையாக்கி
என் மூச்சை நிறுத்திவிடு ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

கடிதம் ...



( வலையும் தொலைபேசியும் வேண்டாமே   )

சொல்ல வந்த கதைகளை
சொல்லி முடித்தேன் கடிதத்தில்
மெல்லமாய் எச்சில் தொட்டு
செல்லமாய் ஒட்டினேன்  தபால் தலையை
என் எச்சில் நனைத்து ஒட்டிய கடிதத்தை
நீரும் எச்சில் துணையோடு தான் பிரிப்பீரோ  ??
நேரில் பகரும் முத்தத்தை  இருவரும்
கடிதத்தில் பரிமாறிக்கொண்டோமோ ?..

தபால் காரன் வரும் வழி பார்த்து
தவம் கிடக்கிறதே கண்கள் இரண்டும்
பதில் கடிதம் வரும்வரைக்கும்
வேலைகள் எல்லாம் வீணாக  கிடக்கிறதே
கடிதம் கண்ணில் கண்ட பின் தான்
மனமும் சொல் பேச்சு கேட்கிறதே  ...

கடிதம் சொல்லும் வரிகள் எல்லாம்
என் காதில் உமது குரலாய் ஒலிக்கிறதே ..
கொஞ்சலும் மிஞ்சலும் தொடர்கிறதே
வஞ்சி நான் உம்பதிலை வாசித்தபின்பும் ..
இரவெல்லாம் உறக்கம் வரும் வரைக்கும்
கடிதத்துடன் அல்லவா கதை சொல்கிறேன் ...
கடிதமும் என் கதை கேட்பதை கண்டு
கண் அயர்ந்து  உறங்கி போகிறேன் ..
விடியும் நாளை புது பொழுதில்
விவரங்களை சொல்ல
விரிவாய் மற்றொரு  கடிதம் எழுத
மனதில் எண்ண அலைகள்
எழுர்ச்சி கொண்டு அடிக்கிறதே ..
தொடரும் இந்த தபால் உறவுகள்
துடிப்புடன் நன்றாய் தொடரட்டுமே ..

~ அன்புடன்  யசோதா காந்த் ~

பாவம் இறைவன் ...




விவசாயி   வீட்டிலோ 
இறைவனுக்கு படையலிட்டும் 
நேர்ச்சைகள் பல நேர்ந்தும்
வேண்டினான் மழை பொழிய .....

வழியோரத்திலோ
நாளிதழ்களை படுக்கையாக்கி
கிழிந்த கோணிப்பைகளை
போர்வையாக்கி
உறங்க காத்திருக்கும் ஏழையோ
இறைவனை வேண்டினான்
மழை  பெய்யக்கூடாதென்று....

இறைவனுக்கும் குழப்பம்
.
~ அன்புடன் யசோதா ~

வங்கி ...





வங்கியில் பணமெடுத்து
வரும் வழியில்
எதேச்சையாய்
ஒவ்வொரு பணத்தினையும்
முகர்ந்து பார்த்தேன் ..
ஒன்றிலுமே வாசனை இல்லை ..

வங்கியின் வாசல் காணாத
அன்னை தரும் பணத்தில்
வாசம் மட்டும் வசமாக குடி இருந்தது ..

மல்லி ஜீரக  கடுகு டப்பாக்கள் தான்
அன்னை பணத்திற்கு  வங்கியாய் இருந்தது
அவள் கைகளில் புழங்கிய பணத்திற்கும்
வாசனையை  விதவிதமான வாரி தந்தது ..

இன்று என் கைகளிலோ
வாசனை இல்லா
சலவைத்தாள்களாக பணம் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

உலகமே நீயாய் ..



      

என்னுள் தோன்றும் எண்ணமாய்
அதை எழுதும் எழுத்தாய்

வார்த்தைகளின் வடிவமாய்
நான் படிக்கும் வேதமாய்

உன் குரல் காதில் ஒலியாய்
கண்களில் உன் முகம் ஒளியாய்

உனை பிரிந்த நேரம் முள்ளாய்
சேர்ந்த நேரமோ சொர்க்கமாய்

நடக்கையில் என் நிழலாய்
நெஞ்சினுள் எப்போதும் நினைவாய்

உன் அணுக்களால் உருவான உருவமாய்
அன்பே நீ என் ஆன்மாவாய்

ஒரே உடலுமாய் ............
ஒரே உயிருமாய் .............
உலகமே எனக்கு நீயாய் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~

பார்வை....



உன் பார்வையின் அர்த்த்தங்களை
என்னவென்று சொல்வேன் .....
அழகான ஆழமான பார்வை
ஆயிரம் கதைகள் சொல்லும் அற்புத பார்வை
அன்பை அள்ளித்தரும் அமைதியின்பார்வை
பசியை மறக்க செய்யும்தாய்மையின் பார்வை
பிணி கூட பறந்தோடும்ஆரோக்கியத்தின் பார்வை
பெரியோர்களை பாசத்தால் அணை போடும் கருணையின்  பார்வை
மழலைகளும்  மகிழும்  உன்  அள்ளி அணைக்கும்  பார்வை
பகைவனையும் நண்பனாக்கும் நட்பின்பார்வை
எதிரிக்கும் பயம் தரும் வீரத்தின்  பார்வை
எனக்கு மட்டும் காந்தமானகாதல் பார்வை....
உந்தன் பார்வை !..

~ அன்புடன் யசோதா காந்த் ~

அறியாமை ...



அடிக்கடி சிரித்து பேசியது
தான் விளையாடும் பொம்மையுடன்
அந்த அழகான குழந்தை ...
 
முந்தானை தலைப்பால்
முகத்தை மூடி அழும் அன்னையிடம்
வெளியில் போகலாம் என்று
கைப்பிடித்து இழுத்தது...

வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்
உறவினர்களை கண்டு
துள்ளல் நடையோடு
கொண்டாட்டமாய் குதூகளித்தது..

விபத்தில் உயிரிழந்த
தந்தையின் உடலை
நடுக்கூடத்தில்
கிடத்தி இருப்பதை அறியாத
கவலை தெரியாத
சின்னஞ்சிறு மழலை ....
 
~ அன்புடன் யசோதா காந்த் ~

இளைய பாரதம்




வானம் ஒன்றும் தூரமில்லை
எங்கள் நெஞ்சில் சோகமில்லை
சிறு புல்லும் நாங்கள் தொட்டால்
கொடும் பெரும் ஆயுதமாகும்..

நாளை உலகம் எங்கள் மூலம்
நல்ல காலம் காண செய்வோம்
புரட்சி செய்வோம் எங்கு எதிலும்
எதிர்த்து நிற்போம் குற்றங்களை

தாய் நாட்டைக்காப்போம்
தைரியம் கொண்டு
தீவிரவாதம் ஒழிப்போம்
இது தாய் மீது ஆணை...

இந்தியன் அனைவரும் உடன்பிறப்பென்று
உறக்கத்தில் கூட உணர்ந்து இருப்போம்
புதுமை செய்யும் இளைஞர்கள் நாங்கள்
புதிய இந்தியா எங்கள் கைகளில்...
 
வந்தே மாதரம் !
~ அன்புடன் யசோதா காந்த் ~


தெய்வத்தாய்...



ஆசையாய்  பெற்றெடுத்தாள்
அழகிய குழந்தை ஒன்று
கொஞ்சி மகிழ்ந்தினர் குடும்பத்தினர்
குழந்தையின் வளர்ச்சியிலோ
மாற்றங்கள் ஒன்றுமில்லை

நாட்கள் நகர நகர  மெல்ல புரிந்தது
மனவளர்ச்சி இல்லா குழந்தை என்று
மருத்துவர் கூறினார்
மற்றுமொரு யோசனை
நிறைவாய் மற்றொன்று
ஆரோக்கியத்துடன்  பெறலாமே  என்று

தீர்க்கமாய் மறுத்தாள்
பிள்ளையை அணைத்துக்கொண்டு
இன்னுமொன்று பெற்றால்
இதை கவனிக்க தவறுவோமோ  என்று…

இன்பமோ துன்பமோ
இக்குழந்தையே போதுமென்று
இறைவனிடம் மன்றாடினாள்  
என்
பிள்ளைக்கு அறிவையும்
நீண்ட
ஆயுளையும் கொடுப்பாயா என்று !


என் கண்களில்
அவள் தாய் அல்ல ..
தெய்வத்தின் உருவமாய்
அவளே தெய்வத்தாயாய் …
                                                   ~  அன்புடன் யசோதா காந்த் ~

நிலவு பெண்ணே .....





இவள் ஒரு ஏமாற்றுகாரி 
நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும் 
என்னிடம் கண்ஜாடை காட்டி நிற்கிறாள் 
பகலெல்லாம் முக்காடு இட்டு கொண்டு 
இரவானால் மட்டும் முகம் காட்டுவாள் 
ஒரு திங்கள்கொருமுறை
சிணுங்கி மருகி தேய்கிறாள் 
பின் மெல்லமாய் வளர்ந்து 
ஒளிவீசி மிளிர்கிறாள் ..
என்னை ராப்பாடியாய் 
ராகம் பாடவைத்து 
மேகதிரையில் மறைந்து 
கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுகிறாள் 
நான் மோகமாய் பார்ப்பதை கண்டு 
மௌனமாய் சிரிக்கிறாள் ...
என்று தான் நானும்
நிலவு பெண்ணே ..உன்னோடு 
பொன் நிலாகாலத்தில் 
உலா வருவேனோ ..
~ அன்புடன் யசோதாகாந்த் ~

விடியாத கனவு .......


கண் மூடி கிடந்தேன் 
கண்டேன் ஒரு புது உலகம் 
ஜொலிக்கும் ஒரு பெரும் நகரம் 
அங்கே ஜாதி இல்லை 
ஏற்ற தாழ்வு இல்லை 
ஆட்டி படைக்கும் அதிகார வர்க்கம் இல்லை 
அங்கே எல்லோரும் மன்னர்கள் 
மதிப்புமிக்க மனிதர்களாக 
போட்டி பொறாமை இல்லை ...
அனைவருக்கும் ஒரே உணவு 
ஒரே ஆடை  ஒரே ஊதியம் 
பெண்களெல்லாம் தேவதைகளாக 
குழந்தைகளோ தேவகுமரர்களாக 
ஊரெங்கும் தோரணம் 
காணுமிடமெல்லாம் விழாக்கோலம் 
வானத்திற்கும் பூமிக்கும் 
வாசல்படியும் அழகிய ஏணிபடியும்
கண்திறக்க மனமில்லை..
கனவிலாவது இவ்வதிசயங்கள் 
தொடரட்டும் என்று .......
~ அன்புடன் யசோதாகாந்த் ~

என்னுயிர் காதலியே .......



சுடும் பார்வையால் என்னை சுட்டவளே
கடும் சொல்லால் கலங்க செய்தவளே
நெடும் தூரம் என்னை ஓடவைத்து
தடுமாறி தடம் புரள வைத்தாயே
பெரும் குற்றம் என்ன என்னிடத்தில் ?
காதலிப்பது குற்றம் என்றால்
இவ்வுலகில் காதலே குற்றமடி ..
உன் பார்வை தணியாதோ
உன் பூவிதழ் திறந்து காதலை சொல்வாயோ
மெல்ல மெல்ல உறிஞ்சும் என் உயிரை
ஒரேயடியாய் பறித்து விடு என் செல்லமே ..
உன் கையால் சாவென்பதும்
மகிழ்ச்சியடி எனக்கு ......

அன்புடன் யசோதா காந்த்

விவசாயம்







நம் பாரதநாட்டின்
முதுகெலும்பாம் விவசாயி
இன்று அவனுக்கும் வேலையில்லா  திண்டாட்டம்..
விவசாயிகள் அதிகமானதால் அல்ல ..
விவசாயம் இல்லாமல் போனதால்
செழிப்பாய் இருந்த கிராமங்களும்
இன்று நகரமாய் மாறும் முயற்சியில்
காடுகள் வெட்டி சமமாக்கி
வயல்வெளிகளை தரிசாக்கி
தரிசாக்கிய நிலங்களை காசாக்கி
விவசாயத்தை அழிக்க துடிக்கும் மக்கள்
ஆதரவாய் அரசாங்கமும் ..
இன்றோ காடு கரைகளும் வயல்வெளிகளும்
அடுக்கமாடிகளாய் கடைவீதிகளாய்..
துரிதமாய் சாகும் விவசாயம்
துடிதுடித்து குழியில் விழும் விவசாயியும்
இன்றே சேமித்து வைத்து விட்டேன்
எனது கணனியில் ..
வயல்வெளிகளையும் பயிர்வகைகளையும்
புகைப்படங்களாய்
அரிசி செடி எதுவென கேட்கும்
எதிர்கால என் தலைமுறைகளுக்காய்


~ அன்புடன் யசோதா காந்த் ~

எல்லாம் அழகே .........





மலைகளில் தெரியும் மந்தாரம்
சிலைகளில் தெரியும் மௌனம்

பேசும்போது விழும் வார்த்தைகள்
பேசாத போது விழுங்கும் உணர்ச்சிகள்

வளர்ந்து ஒளி வீசும் பிறை அழகு
தேய்ந்து மறைந்த நிலவழகு

பல் முளைக்கா மழலை சிரிப்பு
பல் போன முதுமை நகைப்பு

விழிகளில் காணும் காட்சிகள்
மொழிகளில் காணும் இனிமைகள்


வானுயர்ந்த நீண்ட மரங்கள்
குறுகிய புல் பூண்டுகள்

குளிர் நடுங்கும் பனி காலம்
கோடை தரும் கொதிப்பு

ஆறறிவு மனிதனும்
ஐந்தறிவு ஜீவன்களும்

இறைவன் படைப்பில் ...காணும்
எல்லாம் அழகே ...
~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

ஈகோ

விட்டு கொடுக்கும் எண்ணம் 
 எள்ளளவும் இல்லையே என்னிடம்
பிடிவாதம் ஒன்றே...தொடரும் 
தொடர்கதையாய் ..
பேசி தீர்க்கும் விஷயத்திற்கெல்லாம் 
பேசாமல் இருந்து பெரிதாக்கி ..
நான் தொலைத்த உறவுகள் 
மீண்டும் கிடைக்குமோ ?
கொஞ்சி மகிழ்ந்த ,
ஆறாம் வகுப்புதோழி 
எனக்காய் அழுத .
எட்டாம் வகுப்பு கமலா 
எதையும் எனகாய்  செய்யும் 
கல்லூரி நட்பு மீனா 
இன்னும் எத்தனை எத்தனை 
நடப்புக்களை நான் இழந்தேன் 


பாழாய் போன ஈகோ வந்திராவிட்டால் ....
இன்று இருப்பார்ள் என் அருகே
என் உயிர் தோழிகள்  ..


பாழும் ஈகோ நட்பிடம் கூட
விலை பேசி நிற்கிறதே ...
இன்றுவரை எனக்குள் ........
~ அன்புடன் யசோதா காந்த்~


தேடல் .....






ஒன்றாம் வகுப்பில் கிடைத்த சிலேட்டு
இரண்டாம் வகுப்பில் தொலைத்த பென்சில்
மூன்றாம் வகுப்பில் கிடைத்த நோட் புக்
நான்காம் வகுப்பில் தொலைத்த பேனா
ஐந்தாம் வகுப்பில்  கிடைத்த ஜாமன்ட்றி பாக்ஸ்
ஆறாம் வகுப்பில் தொலைத்த கட்டுரை நோட்
ஏழாம் வகுப்பில் கிடைத்த லீடர் பதவி
எட்டாம் வகுப்பில் தொலைத்த புது வாட்ச்
ஒன்பதாம் வகுப்பில் கிடைத்த உயிர் தோழி
பத்தாம் வகுப்பில் தொலைத்த ஹால் டிக்கட்
பதினொன்னாம்  வகுப்பில் கிடைத்த லவ் லெட்டர்
பனிரெண்டாம் வகுப்பில் தொலைத்த பள்ளி வாழ்க்கை
கல்லூரி  போன பின்பும் ஞாபகத்தில்..

கல்யாணம் ஆன  பின்போ
கிடைத்ததையும் தொலைத்ததையும்
தொலைந்து போய் தேடுகிறேன்
இன்று வரை...

~ அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

வயோதிகம் .....












வாலிபத்தின் கடைசி நாட்களாய்
கடந்தவைகளை திருப்பிப்பார்க்கும் தருணமாய்
ஊன்றுகோலே மூன்றாம் காலாய்
பகைவனை கூட நண்பன் ஆக்கும் பக்குவமாய்
மனம் தெளிந்த நீரோடையாய்
நல்லவைகள் மட்டும் நாடும் குணமாய்
ஆசைகளை துறந்து ஞானியாய்
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடாய்
அன்பு மட்டுமே தாரக மந்திரமாய்
ஆதரவை நாடும் அப்பாவியாய்
இறைவனடி சேரும் நாளை எண்ணி தவிப்பாய்
மழலை மனதின் மொத்த உருவமாய்
வயோதிகம் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~

சினிமா........








இது ஒரு கனவு தொழிற்சாலை
அதிர்ஷ்டம் இருப்பவர் அரங்கேருவர்
இல்லாதவரோ அங்கலாய்ப்பார்

நட்சத்திரங்களுக்கோ
இதுவே உயிர் மூச்சு
நமக்கோ இதுவே பெரும்பேச்சு ...
கைக்கெட்டா தூரத்தில் கலர் வானம்
அதில் மின்னும் நட்சத்திரங்களோ கலைஞர்கள்
ஏற்றி விடும் ஏணிப்படிகளாய் மக்கள்
ஜெயிப்பவர் ஏராளம்
தோற்பவரும் தாராளம்
என்றும் வெற்றி கொடி நாட்டட்டும்
வாழ்த்திடுவோம் வாருங்கள் ! ...
தொடரட்டும் ...தொடரும்
இந்த தொடர் கதைகள் ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

என்னவன்....






என்னவன்
***********

என்னை சிந்திக்க செய்தவன்
என்னை கவி எழுத செய்தவன்
என் கவிதைகளின் கருவாய் ஆனவன்
என் மனம் அறிந்தவன்
என்னை அணு அணுவாய் ரசித்தவன்
எனக்கு முகவரி தந்தவன்
என் பெண்மையை நான் உணர செய்தவன்
என் நிழலாய் அவன்
என் நிஜமாய் அவன்
என்றும் என் துணையாய் அவன்
என் முதலாய் ....... முடிவாய்
என்றும் என்னவனாய் அவன் !..
~ அன்புடன் யசோதா காந்த் ~

மார்கழி பனி .






அதிகாலை இங்கு வந்து
பவள முத்துக்களை விதைத்தது யார்?
அள்ளி பொருக்க மனம் ஆசை படுகிறதே
துள்ளி நடக்கும் பாதங்களில்
சின்னதாய் குளிர் சுகம் பரவுகிறதே ...
புல்பூண்டுகளும் ..செடிகொடிகளும்
தலை குளித்து முடித்த பின்
தலை துவட்ட மறந்தனவோ?
கதிரவன் வருவான் ..
தலை காய்த்து விடுவான் என
வானம் நோக்கி ...நேரம் பார்த்து ...
காத்திருக்கின்றனவோ?
நானும் கண் மூடி காத்திருக்கிறேன்
கதிரவனின் கணைகளாய்
எனை அணைக்கும் காதலனை
எதிர் நோக்கி ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

மலர்களே...


பூக்களுக்குள்ளும்
*******************
மயக்குகிறேன் நறுமணத்தால்
கொஞ்சலுடன் .. மல்லிகை பூ

வசீகரிகிறேன் என் நிறத்தால் ..
செல்லமாய் கனகாம்பரம் பூ

மரியாதையும் சிறப்பும்
அழகும் எனக்கே எனக்கே ....
கர்வத்துடன் .. ரோஜா பூ

பூஜைக்காய் பிறந்தவள் நான் ....
அழகாய் அரளிபூ

வாடாமல் வாழ்வேன் நான் ...
வாதிட்டது வாடாமல்லி பூ

அபூர்வ வாசனை என்னுடையது ...
மயக்கத்துடன் மரிகொளுந்து

அலங்கரிப்பதே எங்கள் வேலை ...
சாமர்த்தியமாய் ..
சாமந்தி ..செவ்வந்தி பூக்கள்

ஏழூரும் வீசும் என் வாசம் ..
பொறாமையோடு பிச்சி பூ

என்றுமே அழகாய் நாங்கள் ...
ஏக்கத்தோடு காகிதபூக்கள்

மந்திர வாசனை எனக்கே ....
சிணுங்கலோடு மனோரஞ்சிதம் பூ

பல நிறங்களில்..நாங்கள் .....
கொஞ்சலோடு டிசம்பர் பூக்கள்

பனிரெண்டு வருடத்துக்கு
ஒருமுறை பூப்பவள் நான் ...
கோபத்தோடு குறிஞ்சு பூ

மேலும் மேலும் ........பலபூக்கள்
முடிவில்லை விடையில்லை...
தொடரும் போட்டிகள்
பூக்களுக்குள்ளும் ....
~ அன்புடன் யசோதா காந்த் ~ 



வேஷம் ...






ஒவ்வொரு வயதிலும் பலவகை ஆசைகள் 
சொந்தங்கள் மீது தீராத காதல்கள்  
சேர்ந்திருக்கும் போது பூத்திடும் மகிழ்ச்சிகள் 
பிரிவுகளில் தாங்கமுடியாத  துயரங்கள்
காலங்கள் தரும் அனுபவங்கள் 
நிரந்தரமாய் தாக்கும் சோகங்கள் 
அருவியாய் கொட்டும் தத்துவங்கள் 
மறந்த கமைகள் ...
மறுத்த உண்மைகள் ..
கல்யாணம் எனும் பந்தங்கள் 
அங்கேயும் அரங்கேறும் நாடகங்கள் 
சொல்லும் கதைகள் சில
சொல்லாத கதைகள்  பல 
காட்சி முடிந்த பின்னும் 
கலைய மறுக்கும் வேஷங்கள் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~

திரு நங்கைகள்




கடவுளுக்கோ குழப்பமாய்
தாய் தகப்பனுக்கோ
அவமான சின்னமாய்
உடன்பிறப்புகளுக்கோ கேலியாய்
உறவினர்களுக்கோ ...வேடிக்கையாய்
சமுதாயத்திற்கோ கேள்வியாய்
அரசாங்கத்துக்கோ தலைவலியாய்
எங்களுக்கோ வாழ்க்கை தவிப்பாய்
நாங்களும் மனிதர்கள் தானே
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பர்
மன்னராய் வேண்டாம் மனிதராய் மதியுங்கள்
சீரியல் பார்த்து அழுவோர்களும்
இரங்க மனமில்லா எங்களிடம்
தாயே அணைக்க மறுத்த சேய்கள் நாங்கள்
வேறு யார் வந்துதான் நெஞ்சோரம் சாய்ப்பாரோ
தத்து எடுத்தோம் எங்களுக்குள் பல உறவுகளை
மனம் குமுறுகிறோம்
மனிதாபிமானம் என்றால் ??????????
~ அன்புடன்  யசோதா காந்த் ~

பெண் ....




புதுமை   உலகை படைக்க
புயலாய்  புறப்பட்டவள்
வாழ்க்கை   படகை காக்க
வரம் வாங்கி வந்தவள்
மானிட பிறவிக்கு எல்லாம்
ஆதி உயிர் தந்தவள்
தாயாய் தாரமாய்
சகோதரியாய் நண்பியாய்
ஏற்ற பாத்திரங்களில்
கடமையாய் கருத்தாய்  செய்பவள்
எங்கும் எதிலும்
கருவாய் அவளே பெண் .....
~ அன்புடன் யசோதா காந்த் ~

ஆறு...




துள்ளி துள்ளி விழும்
           வெள்ளி மலையருவியின்
செல்ல மகள் நான்
              என் காதலன் கடல் நாயகனை
சேர காடு மலை கடந்து
              நாடு புறங்களில் ஓடி
பாடி ஆடும்
             பருவ மங்கை நான்
என் இரு புறமும்
               செடி கொடிகளும்
பூக்கும் மரங்களும்
               வழித்துணையாய் என்னோடு
கதைகள் பேசி
                 கருத்துகள் பரிமாறி
நடகின்றன ....
                   காதலனை காணப்போகும்
துடிப்பின் வேகம் குறைக்காது
                  எனக்குள்ளே ...
கொஞ்சிகுலவும்    மீன்கள் கூட்டம்
                    ஓரமாய் எட்டிப்பார்க்கும்
மீன்கொத்தி கூட்டம்
                  என் சலசலப்பின் சத்தத்தில்
கவி பாடும் ...
                   பறவைகள் கூட்டம்
என் வழிகளில் ....
                     வண்ண பூக்களின் கூட்டம்
இந்த இயற்கையின் ...
                     அழகை படைத்த
இறைவனை வணங்கி கொண்டே
                    என்னவனை போய் சங்கமித்திடுவேன்

~ அன்புடன் யசோதா காந்த் ~

எமன் ...


உயிரை பறித்து 
உயிரை  நெரித்து
உயிரை   கொன்று
உயிரை தின்று
உயிரை முடித்து
உயிரை குடித்து
எனக்கே எமனான
என் உயிரே
உனை அமுதென்று பருகினேனே ..
விஷமாய் எனை கொல்கிறாயே ?.. .................
~ அன்புடன் யசோதா காந்த் ~

அனாதை


பிறக்கும் குழந்தைகள் எல்லாம் 
தவமாய் பிறந்தவர்களா ??
தண்டனையாய் பிறந்தவர்களா ??
எங்களை பெற்றவர்களை
எங்கோ தொலைத்து விட்டோம் ..
 
அள்ளி அணைக்க அன்னை இல்லை ...
அறிவை சொல்ல தந்தை இல்லை ..
கொஞ்சி மகிழ
உடன்பிறப்புகள் இல்லை ..
சொந்தமென்று சொல்ல
உறவுகளும் இல்லை ..
  
எனினும்
எங்களுக்குள் சில நல்ல விஷயங்கள்
ஜாதி மத பேதம் எங்களுக்குள் இல்லை ..
ஏழை பணக்காரன் ஏற்றத்தாழ்வுகள்  இல்லை
பொன்னுக்கும்  மண்ணுக்கும் ஆசை இல்லை
புன்னகைக்கு  குறைவில்லை என்றுமே எங்களுக்குள் ...
  
வாழ்க்கையை ஜெயிக்கும் போராட்டத்தோடு
அன்பெனும் ஆதரவை நாடும்
அனாதை விடுதியின்
ஆண்டவன் கைப்பிழைகள்  நாங்கள்................

~ அன்புடன் யசோதா காந்த் ~

காதல் தேவதை




ஒரு இளவேனிற்காலத்தில்
இனியமாலை பொழுதில் ..
மெல்லிய இருட்டில்
தந்திரங்கள் பல கற்ற
மந்திரப் பெண்ணை கண்டேன் ..
கண்களிலே மாயம் காட்டி
நெஞ்சினிலே காயம் செய்தாள்
இவள் மானிட மங்கையோ ?
தேவலோக தேவதையோ ?
நடு நிஷி மோகினியோ ?
இனி ஒரு நாள் வருவாளோ ?
அவள் பெயர் தான் என்னவோ ?...
அந்த பின்னலிட்ட சின்ன கொடியாளை
காலமெல்லாம் காத்திருப்பேன் நான் காண்பதற்கு ...
காதலித்தே அவளை கைப்பிடிப்பதற்கு .................

~ அன்புடன் யசோதா காந்த் ~

திணறல்..




புகைப்படங்களில் உனை
கண்ணிமைக்காமல் பார்த்திருந்தேன்
நேரில் பார்த்த போதோ
வெட்கம் திரைகளாக
விழிகள் மூடிக்கொண்டதே ...


நான் உன்னோடு பேச
ஆசைப்பட்டபோதோ
நான்கு குணமும் தடுக்கிறதே ...
ஆசைகளை
அணை போட முடியாமல்
மனம் ஆகாயத்தில் சிறகடிக்க
உன் மூச்சு காற்றை நான் சுவாசிக்க
இங்கே ஒரு மூச்சு திணறல் போராட்டம் நடக்கிறதே...
காதலை அடக்க காதலால் தான் முடியுமே ???.................

~ அன்புடன் யசோதா காந்த் ~

அண்ணன் ...


ஒரு கொடியில் மலரவில்லை 
தொப்பிள்கொடி உறவுமில்லை
ரத்த பந்த சொந்தமில்லை
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இன்பத்தில்  குதூகலிக்க .
துவண்ட பொழுதில் தூக்கி நிறுத்தவும்
என் உடன் பிறப்பாய்
எங்கிருந்தோ வந்தான்
அண்ணன் உன் துணை நான் என்றான் ...
  
அண்ணனே ஆலமரமாய் நீ எனக்கு
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறேன் .. 

~ அன்புடன் யசோதா காந்த் ~
  
(எனது உடன் பிறவா அண்ணன் ஒப்பிலியன் பாலு அவர்களுக்காக ... ) 

மறந்து விடு...



உறக்கமில்லா இரவுகளும் 
கலங்கி தவித்த நினைவுகளும் ..
போதும் ..போதும் .. .
மறந்து விட்டேன்  உன்னை ..
மறந்து விடு என்னை ..
விட்டு  விடு என்னை
தொடராதே  என்னை ..
நிம்மதியை தேடி  என் பயணம்
தொடரட்டும் தனியே  ....
சிறகடிக்கும் பறவையாய் .................

~ அன்புடன் யசோதா காந்த் ~  

அன்பே..



அன்பே உன் கண்கள்
   எனும் சிப்பிக்குள்
முத்தாய் இருக்கும் என்னை
   ஒருவரும் கன்னமிடாமல்
கண் மூடி வைத்துக்கொள் ......

~ அன்புடன் யசோதா காந்த் ~ 

நீ நான் ...



பூவாய் நீ
அதில் புதைந்த மகரந்தமாய் நான்
மகரந்தமாய் நீ
அதில் மயங்கும் வண்டாய் நான் ..

கவிதையாய் நீ
அதில் கலந்த வரிகளாய் நான்
வரிகளாய் நீ
அதை வடித்த கவிஞனாய் நான்

வானவில்லாய் நீ
அதில் வண்ணங்களாய் நான்
வண்ணங்களாய் நீ
அதை தீண்டும் தூரிகைகளாய் நான்

கானங்களாய் நீ
அதில் கலந்த ராகங்களாய் நான்
ராகங்களாய் நீ
அதை இசைக்கும் ஒலிகளாய் நான் ..

புல்லாங்குழலாய் நீ
அதை மீட்டும் உதடுகளாய் நான்
உதடுகளாய் நீ
அதை மூடும் உதடுகளும் நான்

வாய்க்காலாய் நீ
அதன் வரப்போர செடிகளாய் நான்
செடிகளாய் நீ
அதன் உயிர் வேர்களாய் நான்

விழிகளாய் நீ
அதன் நடுவே கண்மணியாய் நான்
கண்மணியாய் நீ
அதை தாங்கும் வெண் திரையாய் நான்

மொழிகளாய் நீ
அதில் முதலாம் தமிழாய் நான்
தமிழாய் நீ
தமிழின் அமுதாய் நான்

 
~ அன்புடன் யசோதா காந்த் ~ 

கேள்வி...



விதைக்கும் விதைகள் எல்லாம்
     செடிகளாய் முளைக்குமா ?
முளைக்கும் செடிகளெல்லாம்
     மரங்களாய் வளருமா ?
வளர்ந்த மரங்கள் எல்லாம்
       உயிரனங்களுக்கு நிழல் தருமா ?
நிழல் தரும் மரங்கள் எல்லாம்
        நெடுநாள் உயிர் வாழுமா?
நெடுநாள் வாழும் மரங்கள் எல்லாம்
          பூத்து காய்த்து   கனி தருமா ?
பூக்கும்    கனிகள்ளெல்லாம்
            தகுந்த இடம் போய் சேருமா ?
அடுக்கடுக்காய் கேள்விகள்
            விடை தேடும் விடைகள்

~ அன்புடன் யசோதா காந்த் ~  

காதல் (?)




ஒருவரை ஒருவர் சந்தித்தோம்
கண்களால் பரிமாறி கொண்டோம்
வணக்கம் சொல்லி ஆரம்பித்தோம்
ஏதேதோ உரையாடினோம்
சில நிமிடங்கள் பேச நினைத்தோம்
பல கணங்களாய் தொடர்ந்தோம்
நாளை பேசி கொள்ளலாமே
என நினைத்த போதோ
மனமின்றி  விடைபெற்றோம்
என்ன பேசினோம் ? எதை பற்றி பேசினோம் ?
விடை தெரியவில்லை
மனதில் மற்றும் ஒரு கேள்வி
இது என்ன ?   காதல் ?.........

~ அன்புடன் யசோதா காந்த் ~

சின்ன சின்ன ஆசை


மழையில் நனைந்து 
     துள்ளி  குதிக்க வேண்டும்
களிமண் பூசிக்கொண்டு
     வெயிலில் காய வேண்டும்
உயரமான மலைகளில்
     ஏறி இறங்க வேண்டும்
பனிக்கட்டியின் நடுவில்
     படுத்து உறங்க வேண்டும்
பூக்களின்  மத்தியில்
      புகைப்படம் எடுக்கவேண்டும்
பாக்கள் பல பாடி
       பரிசுகள் வாங்க வேண்டும்
வேகமாய் ஓடும் ஆற்றில்
       எதிர்   நீச்சல் போட வேண்டும்
முடிவே இல்லாத பாதையில்
        பயணம் போக வேண்டும்
ஒரு நாளேனும் நானும்
         முதல்வர் ஆகவேண்டும்
உறவே இல்லாத உயிர்கள் எல்லாம்
         என் சொந்தங்கள் ஆகவேண்டும்
கவலைகள் எதுவும் இன்றி வாழ் நாள்  முழுவதும் 
          சிரித்து மகிழ வேண்டும் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~   

மறக்க முடியவில்லை..


என் கண்களில் நீ
என் நெஞ்சினுள்  நீ
என் உணர்வுகளில் நீ
என் உயிரினில் நீ
என் உடல் பொருள் ஆவி நீ

இன்று நீ இல்லாத என் நிலை
கண்கள் இரண்டும் பிடிங்கியதுபோல்
நெஞ்சை கசக்கி பிழிந்ததுபோல்
உணர்வுகளை கொன்று போட்டது போல்
உயிரை என்னிடம் இருந்து பறித்து கொண்டது போல்
வழி அறியாது
நிலை குலைந்து
என்னை நினைக்காமல் நீயும்
உன்னை மறக்க முடியாமல் நானும்
சாகாமல் உயிரற்றவளாய் ....
~ அன்புடன்  யசோதா காந்த் ~

கனவுகள் ...







தினமும் இரவுகளில்
இன்ப  கனவுகளில்
அழகாய் வருவாள் பெண்ணொருத்தி
வண்ண ஆடைகள் உடுத்தி
செல்லமாய் கதை சொல்வாள் காதோரத்தில்
அவள் குரலோ ராகமாய்
கிளிபேச்சின் கொஞ்சலாய்
என் மனதிலும்
நாத ஒலியும்..மிருதங்க தாள  ஒலியும்
அவளின் ராகமும்
என் தாளமும்  சங்கீதமாய்
ஆடலும் பாடலும்  விடியும் வரை
விடிந்த பொழுதோ
எல்லாம் மாயமாய்
எனினும் காத்திருப்பேன்
இனிய இரவுகளுக்காய்
என்னவள் வரும்  கனவுகளுக்காய் .....
~ அன்புடன்  யசோதா காந்த் ~

அன்னை..



பூவை விட மென்மை
பாலை விட வெண்மை
நீரை விட தூய்மை
சொற்களில் இனிமை
எல்லாவற்றிலும்  உண்மை
கண்களில் கருணை
அன்பு மட்டுமே கொள்கை
அனைத்தையும் அள்ளி தரும் தன்மை
அவளால் எங்களுக்கு மேன்மை
அவளை பற்றி பேசுவதோ பெருமை
அவள்தான் தாய்மை
ஆசிதரும் அன்னை ....
~ அன்புடன் யசோதா காந்த் ~