விளக்கேற்றுவோம் ...






அறியாமை எனும் இருளை
                   கல்வி என்ற விளக்கால் விரட்டுவோம்

பகைமை எனும் தீயை
               நட்பு எனும் நீரால் அணைப்போம்

ஒற்றுமை எனும் கொள்கையை
           அன்பு எனும்விலங்கால்  பூட்டுவோம் 

இறை எனும் ஆன்மீகத்தை 

          பக்தி எனும் மார்க்கத்தால்  நாடுவோம்

 வறுமை எனும் பேயை
          அயரா உழைப்பால் ஒழிப்போம் 

~அன்புடன் யசோதா காந்த் ~

இனியொரு ஜென்மம்...




இனியொரு ஜென்மம் வேண்டும்
இரவலாய் இறைவனிடம் கேட்பேன்

பேசி தீராத கதைகள் பேச
மீண்டும் ஒரு ஜென்மம் நமக்கு

நீயும் நானும் வாழ
மாய தீவு ஒன்றும்


பூந்தோட்டம் ஓன்றும்
உன்னைப்போல் அழகான பூக்களும்

நம் காதலுக்கு காவலாய்
இயற்கை அன்னையும்

நம் காதலில் கை கொடுக்கும்
நல்ல நண்பர்கள் கூட்டமும்

அன்பே உன் தோழியராய்
தேவலோக மங்கைகளும்

இனிதாய் நம்முடன்
இழந்த சில சொந்தங்களும்

கேட்டதை தந்திடும் 
அற்புத விளக்கொன்றும் 

இன்பமாய் அன்பே
இன்புற நானும் நீயும்

புத்தம்புது ஜென்மத்தில்

~ யசோதா காந்த் ~

விரைவில் வந்துவிடு ...




சாணம் தெளித்து கோலமிடும் முற்றம்
பூஜைக்காய் தினம் பறிக்கும் செம்பருத்தி


முற்றத்து முல்லை பூக்கள்
நீ பரிமாறி முதல் உணவு உண்ணும் காக்கை


ஓடி பிடித்து மாலையில் நீ அடைக்கும் கோழி குஞ்சுகள்
ஈர கூந்தலில் நீ சுற்றும் துளசி மாடம்


ஓயாமல் அமர்ந்தாடும் மர ஊஞ்சல்
நம் வீட்டு மாமரத்தில் வந்தமரும் கிளி கூட்டம்

உன் கதைகள் தினம் கேட்கும் சமையலறை
உன் கைகளோடு கைகலப்பு செய்யும் பாத்திரபண்டங்கள்

இவைகளும் என் போல் தவிக்கின்றன
மகபேறுக்காய் உன் தாய் வீடு நீ சென்றதை அறியாமல்

~அன்புடன் யசோதா காந்த் ~

வாழ்க்கை ....





தேனினும்
இனிமை உண்டோ ?
வேம்பின்  சுவையும்
விரும்புவார் உண்டோ ?

இறைவன் தந்த வாழ்வினிலே
இனியவை  மட்டும் அனுபவித்து
துன்பம்  தவிர்க்க முடியுமோ?

இன்பத்தில் இன்புறும் மானிடன்
துயரத்தால் துவளுவதேனோ ?

உலகின் உயிர்கள் எல்லாம்
ஒரே நிலை அடைய முடியுமோ?
பஞ்சு மெத்தையில் ஒருவனும்
வீதியோர மண்படுக்கையில்
மற்றொருவனும்  ஏனோ? 

முரண்பாடான கேள்விகளுடன் ...
முறையான பதிலை தேடி ...(?)


~அன்புடன் யசோதா காந்த் ~

பொய் ...




பொய் சொன்னதால்
இறந்ததே  என் மனம்
உயிர் அற்ற ஜடமாகி
உடலிலே ஊனமாகி
பேச்சின்றி ஊமையாகி
நானோ பாவியாகிபோனேனே ! 

அறியேன் இதற்குமுன்
இதுபோல் ஒருநிலை

கொலைக்குற்றம்  சிறிதாகி
என் பொய் குற்றம்
பெரிதானதே...

இல்லாத  ஒன்றை
இருப்பதாய் சொல்லி
சுயம் ஒன்றே
சிந்தனையாய்
யார் என்னை மன்னிப்பாரோ

தெய்வம் கூட பொறுக்குமா
பாவி நான் செய்த பாதகத்தை ..

~அன்புடன் யசோதா காந்த்~



மரணம் ,,,




நானும் பலசாலியே
   எனை கொல்ல
அணுகுண்டோ  கத்திகளோ
தூக்கு கயிறோ  விஷமருந்துகளோ
தேவை இல்லையே ...

நீ என்னுடன் பேசாதிருக்கும்
இந்த  இந்த நொடிகள்..
என்னை  சாவின் எல்லைவரை
கொண்டு செல்கிறதே
நான் வாழ்வதும் வீழ்வதும் உன்னாலே ! 


~அன்புடன் யசோதா காந்த் ~

தருணம் ....






வாடிய மலரில் 
நீர் ஊற்றும் தருணம்

அழுத குழந்தைக்கு 
பால் குடிக்கும்  தருணம்
சுடும் வெயிலில் நடந்தவரை
குளிர் அறையில் இருத்திய தருணம்

நாவறண்டு தவித்தபோது
ஒரு வாய் தண்ணீர் கிடைத்த  தருணம்

பருந்து தூக்கி சென்ற குஞ்சை 
தாய் கோழி பெற்ற தருணம்

மாரடைப்பால் மூர்ச்சையாகி
அவசர சிகிச்சையால் உயிர் பெற்ற தருணம்

இந்த தருணங்களை போலல்லவா
அன்பே  என்னை பிரிந்த நீ 
கூடிய தருணம் .

~அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

எல்லாமாய் அவனே ...




அன்பே வலிகள் என்பது
என் உடலில் இல்லையே

கோபமோ எரிச்சலோ
என்னில் நிலைப்பதில்லையே

துக்கமும் சஞ்சலமும்
என்னை நெருங்குவதில்லையே 

உலகே அழியும் என்றாலும்
எனக்குள் கலக்கம் இல்லையே

தனிமையாய் நான் தனித்து போனாலும்
என்னிடம் தவிப்பு இல்லையே

யார் என்னை வெறுத்தாலும்
நான்  வெட்கி போவதில்லையே

இவைஎல்லாம் நீ என்னுள்
எல்லாமாய் இருப்பதாலோ
என்றென்றும் நான் இன்பத்திலே

~அன்புடன் யசோத காந்த் ~

உயிர் துளிகள் ...



உழைப்பில்
பயத்தில்
பிணியில்
துணையாய் வேர்வை துளிகள் அன்றோ !

பஞ்சத்தில்
விவசாயத்தில்
உயிர்வாழ்வில்
வரபிரசாதமாய் மழை துளிகள் அன்றோ !

துயரத்தில்
ஆனந்தத்தில்
பிரிவில்
ஆறுதலாய் கண்ணீர் துளிகள் அன்றோ !

ஜனனத்தில்
விபத்தில்
உயிர்கொடுக்க
ஆதரவாய் இரத்த துளிகள் அன்றோ!




~அன்புடன் யசோதா காந்த் ~

என் இதயமே ..











உன் இதயத்தில்
உயிராய்
உறைந்திருக்க வேண்டும்

உன் விழிகளில்
பார்வையாய்
ஒளி பெற வேண்டும்

உன் இதழ்களில்
மொழிகளாய்
ஒலி பெற வேண்டும் 

உன் கரங்களில்
காதலான சிறு குழந்தையாய்
தவழ வேண்டும்

உன் கூந்தலில்
தினம் நீ சூடும் மலராய் 
மலரவேண்டும்

உன் நிழலாய்
நீங்காமல் உன்னுடனே
நடக்கவேண்டும் ..



~அன்புடன்  யசோதா காந்த் ~

அரசாங்க வேலை ....




அரசாங்க வேலைக்கு ஆசைப்பட்டு
அல்லும் பகலும் கஷ்டப்பட்டு

ஓடி ஓடி தேர்வு எழுதி
கனவுக்குள் கோட்டை கட்டி

சுப்பையா கூப்பிட்டான்
சுண்ணாம்பு அடிக்க

கண்னையா அழைத்தான்
காட்டு வேலை செய்ய

மிராசுதாரும் கூப்பிட்டார்
அரிசி ஆலையில் மேற்பார்வை பார்க்க

தரகர் மாமா ஆலோசனையோ
தங்கமா ஒரு பெண்ணை கைபிடிக்க

வேண்டாம்னு ஒதுக்கி வச்சேன்
மேற்படி சொன்ன எல்லாவற்றையும்

அப்பாவும் என்னை பேரு மறந்து
ஆசையா கூப்பிட்டாறு தண்ட சோறு  என்று


அம்மாவும் வெட்டிப்பயல் நீ என்று
வாய் நிறைய  வசைபாடுவாள்


வேலைவாய்ப்பு அலுவலகம்  படைகள்எடுத்தும்
விண்ணப்பங்களும் கால்செருப்பும் வீணாய் போனதே

கூலிவேலை செய்ய தடைபோடும்
பட்டம் படிச்ச தலைக்கன இருளுக்கு
எந்த விளக்காலும்
வெளிச்சம் தர முடியலையே .. 
~அன்புடன் யசோதா காந்த் ~

தாய்மை ..




என் பெண்மையின் 
அர்த்தம் தெரிந்த நேரம் 

அனைவரும் என்னை 
பாதுகாத்த நேரம்

கவலை கண்ணீர் 
நின்று போன நேரம்  

ஒவ்வொரு நிமிடத்தையும் 
நான் ரசித்த நேரம் 

குமட்டலையும் 
வாந்தியை  வரவேற்ற நேரம் 

ஆசைப்பட்ட உணவுகளை 
வெறுத்த நேரம் 

போகுமிடமெல்லாம் 
பெருமை சேர்த்த நேரம் 

கருவின் துடிப்பை உணர்ந்து
மகிழ்ந்த நேரம் ...

என்னவென்று சொல்வேன் ?
தாய்மையின் இனிய பொழுதுகளை ...

~அன்புடன் யசோதா காந்த் ~

என்னவளின் கோபம் ...



நெஞ்சை கிழிக்கும் உணர்வுகளை
சொல்லால் சொல்ல முடியவில்லை

நினைவில் நிற்கும் பதிவுகளை
கனவால் கூட அழிக்க முடியவில்லை

நீ கொடுத்த முத்தங்களை
என் நிழலும் கூட மறக்கவில்லை

நம் விரல்கள் பின்னி நடந்ததை
அந்த கடற்கரை மணலும் மறுக்க வில்லை

உன்னை தவிர வேறொரு பெண்ணை
என் கண்கள் காணபோவதில்லை

கோபம் எறிந்து வந்துவிடு கண்ணே
சொர்க்கம் நமக்கு தூரமில்லை

~அன்புடன் யசோதா காந்த்~

என்னவளுக்காய் ....




மழை அது பொழியட்டும் பொழியட்டும்
மங்கை அதில் ஆனந்தமாய் நனைவதால்

வெயில் அது அடிக்கட்டும் அடிக்கட்டும்
என்னவள்  மாடியில் துணி உலர்த்துவதால்

தென்றல் அது வீசட்டும் வீசட்டும்
என் கண்மணி மேனி குளிர்விப்பதால்


பூக்கள் அது மலரட்டும் மலரட்டும்
பூவை அவள் பூந்தோட்டத்தில் உலவுவதால்

அருவியில் நீர் கொட்டட்டும் கொட்டட்டும்
அழகி அவள் அழகாய் நீராடுவதால்

பறவைகள் இசை பாடட்டும் பாடட்டும்
கன்னி  அவள் கண்மூடி ரசிப்பதால்

இந்த இயற்கை அனைத்துமே ஒன்றாய்
என்னுயிர்  காதலிக்காய் இயங்கட்டுமே


~அன்புடன் யசோதா காந்த்` ~

நேருக்கு மாறாய் .....



நிலவுக்கு குளிரில்லை
வானவில்லில்  வண்ணங்களும்  இல்லை

பூவுக்கு வாசமில்லை
தேனுக்கு சுவையும் இல்லை

சூரியனுக்கு ஒளியில்லை
இரவுக்கு இருளும் இல்லை

மனிதர்களுக்குள் காதல் இல்லை
எனக்குள் நீயும்இல்லை

உனக்குள் நானில்லை
உடலில் உயிரும் இல்லை

நீ என்னை விட்டு பிரிந்த கணம் முதல்
அனைத்தும் நேருக்கு மாறாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~

மிருகக் காட்சி சாலை ....











மனிதர்கள் நாம்
வாய்பேச தெரிந்தவர்கள் 
கொடி பிடிக்கவும் கோஷம் போடவும்
தீயதை எதிர்க்கவும் ,தட்டி கேட்கவும்
துணிந்து நிற்கிறோமே


மிருக காட்சி சாலையிலோ
உயிர் ஜீவிகள் அனைத்தையும்
கூண்டுகளில் அடைத்தும்
பாதி வயிற்று உணவு கொடுத்தும்
காட்சி பொருளாக்கி
காசாக்கி கொண்டு இருக்கிறோமே..
அவைகளும் தீர்மானித்தன
அடுத்த பிறவியில்
நம்மை கூண்டில் அடைத்து
பார்வையாளர்களாக அவைகளுமாம்


~அன்புடன் யசோதா காந்த்~

இறைவன்....





உருவம் இல்லாதவனே
உலகை படைத்தவனே  
உயிர்களை காப்பவனே
வரங்கள் தருபவனே
துன்பம் துயர் துடைப்பவனே
தடைகள் அகற்றி தயை காட்டுபவனே 
ஆயுள் தந்து ஆசி செய்பவனே
நிழல் போல் துணையானவே
ஆபத்தில் அடைக்கலம் தருபவனே
நல்வழி நாளும் நடத்துபவனே
எல்லாம் வல்ல இறைவனை தொழுதே
இன்புற வாழ்வோம் இவ்வுலகிலே ! 

~ அன்புடன் யசோதா காந்த் ~

கிளிப்பிள்ளை .............






வார்த்தைகளை தொகுத்து வரிகளாக்கி
கவிதைகள் புனைந்து
கவிஞன் ஆகும் ஆசை எனக்கு

முற்றத்து மாமரம் வந்துபோகும்
பச்சை கிளி ஒன்று
செந்தமிழ் கவி கேட்க
ஜன்னலோரம் வந்தமர்ந்தது
பிழைகள் இருப்பின் சொல்லித்தருவேன் என
நான் வரைந்த வரிகளை
வாசிக்க சொன்னது

கிளிக்கென்ன தெரியும்
இலக்கணமும் இலக்கியமும் என
மனதில் எள்ளி நகைத்து சொல்ல தொடங்கினேன்
வார்த்தைகளின் பஞ்சத்தால்
ஒரேபோலான வரிகளே என் கவிதையில்


கோபம் கொண்ட பச்சை கிளியோ
சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை நீ என சொல்லி
சிறகடித்து பறந்து சென்றது

மீண்டும் மீண்டும்
திருத்தமுயன்றும்  தோற்று போகிறேன்
சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாய் நான்

~அன்புடன் யசோதா காந்த் ~

மழையே போய் விடு .....









அன்புள்ள மழைக்கு

தவம் செய்து கேட்டும்
 பொழிய மறுப்பாயே..

இன்றோ ...

பொழிந்தாய் ..பொழிகிறாய்
இன்னும்  பொழிவாயோ?

உன்னால் பள்ளங்களும் நிறைந்து
குளம் குட்டை ஆனதே

சாலைகள் மூழ்கி
போக்குவரத்து முடங்கி
வாகனங்கள் வெள்ளத்தில்
கப்பல்கள் போலானதே

ஆற்றோர வீதியோர  குடிசைகள்
இருந்த இடம் தெரியவில்லையே

விவசாயம் செய்த பயிர்களெல்லாம்
உயிரோடே அழிந்து போனதே

கிராமத்து பள்ளிக்கூடமும்
ஒழுக்கினால் மூடி கிடக்கிறதே

எங்க அப்பாவும் வேலையின்றி
வீட்டுக்குள் திணறுகிறாரே

முதல் மழையில் நனைந்ததால்
மூக்கும் ஒழுகி சளி பிடித்து ஆட்டுகிறதே


நீ வராவிட்டாலும் தொல்லை
வந்தாலும் தொல்லை

பெய்தது போதும் மழையே
வந்தவழியே போய்விடு
அன்புடன் சண்டையிடும் சண்டைக்காரி

~அன்புடன் யசோதா காந்த் ~

துணை .....



முதல் ஐந்தில் ...
              தாத்தா உடன் நடந்தேன்
             மாயா ஜால கதைகள் கேட்டு

இரண்டாம் ஐந்தில் ...
                   அப்பா உடன் நடந்தேன்
                 அவரின் அறிவுரைகள் கேட்டு

மூன்றாம் ஐந்தில் ...
                   அண்ணன் துணையில் நடந்தேன்
                    பயமின்றி துணிச்சல் கொண்டு

நான்காம் ஐந்தில் ...
                  காதலனுடன் நடந்தேன்
                 உலகமே என் வசம் என எண்ணி கொண்டு

ஐந்தாம் ஐந்தில் ...
                காதலனே கணவரானபின் அவருடன் நடந்தேன்
              நான் சாய்ந்து கொள்ளும் சுமைதாங்கி அவரென்று

ஆறாம் ஐந்தில் ...
               நான் பெற்ற மகனுடன் நடக்கிறேன்
              என் வயோதிக காலத்தின் நிழற்குடை இவனே என்று

காலகாலமாய் பெண்களின்
எல்லாவயதிலும் இவர்களே துணையாய் ..

~அன்புடன் யசோதா காந்த் ~