முத்து மாமா ...,,,














முந்திரி தோப்பில்
முந்தானைய இழுத்த
என் முத்து மாமா
உன் முத்து சிரிப்பில்
முற்றும் தொலைத்தேன்
என் செல்ல மாமா

உன் அக்கா மகள்
என் அன்பு உனக்குத்தான்
முத்து மாமா
நீ கள்ள தனமாய்
கண்டு ரசிப்பது ஏன்
என் தங்க மாமா

கோயில் குளம்
 வேண்டி நிக்கிறேன்
என் முத்து மாமா
நீ வேண்டாதனம் 
செய்ய துடிப்பதேன்
என் கண்ணு மாமா

ஜாதி சனம் முன்
உன் தாலிக்காய் தலை குனிவேன்
என் முத்துமாமா
நீ தன்னந்தனியாய்
நின்னு தவிப்பதேன்
என் சின்ன மாமா

வைகாசி மாசம்
பந்தல் போடணும்
என் முத்து மாமா
நீ வேலி அடைத்து
வெள்ளாமை  தொடங்கு
என் ஆசை மாமா

ஆடி மாசம்
அம்மா கூப்பிடுவா
என் முத்து மாமா
நீ அங்கே இங்கே நின்னு முழிப்ப
என் அழகு மாமா

நம்ம பேரு விளங்க
பிள்ளைகள் வளரும்
என் முத்து மாமா
நம்ம காலம் முழுவதும்
இன்ப கதை சொல்லுவோம்
என் வீர மாமா

~அன்புடன் யசோதா காந்த் ~

இறைவா தூக்கம் கொடு .....












இறைவா தூக்கம் கொடு ..

பணமே சிந்தனையாகி 
                தூக்கமின்மை

ஆரோக்கியம் நலன் கருதி
                தூக்கமின்மை

உறவுகளின் பிரிவுகளால்
                  தூக்கமின்மை

மனம் நிறைந்த மகிழ்ச்சியால்
                 தூக்கமின்மை

காதலின் சுகங்களை அசைபோட்டு
                   தூக்கமின்மை

குழந்தைகளின் எதிர்காலம் கருதி
                     தூக்கமின்மை


கடன் தொல்லை தாங்காதே
                    தூக்கமின்மை
அடுத்தவர்  உயற்சி கண்டு பொறாமையால்
                   தூக்கமின்மை 

வயதாகி போனாலோ மரணம் நினைத்து
                       தூக்கமின்மை

தூங்காத விழிகள் ஆயிரமோ ???????????
இரவுகள் ஆயிரமோ .?????????????????.


~ அன்புடன் யசோதா காந்த் ~

பள்ளிக்கூடம் ....





இவளும் நம் தாயல்லவா
தாயவள் கருவறையில்
நமக்கு உருவம் கொடுபாள்

பள்ளிக்கூட   வகுப்பறையோ
நம் வாழ்வுக்கு வழி திறப்பாள்

குயவனின் கைபட்ட களிமண்ணோ
சிறப்புமிக்க  பொருளாகும்

பள்ளிகூடமோ நம்மை
மாண்புமிகு மனிதர்களாக்கும்

மனிதனை   மனிதனாக்குவதும்
பள்ளிக்கூடமே

பட்டங்களும் பதவிகளும் தந்து
சரித்திரம்  படைக்க வைக்குமே

அறிவு எனும் கண்ணைதிறந்து
கல்விதரும் பள்ளிக்கூடமும்
நமது கருவறையே ..

~அன்புடன் யசோதா காந்த் ~


பொக்கிஷம் ...

..







எழுதுவதும் வாசிப்பதும்
கிழித்து எறிவதும் தொடர்கதையாய்
மனதின் தேடல் கிடைப்பதுவரை
காகித துண்டுகள் மலைபோல் குவியலாய்

மனைவிக்கு கோபம்
வீட்டை சுத்தம் செய்தே
ஓய்ந்து விடவே

குழந்தைகளும் எச்சரித்தன எனை
குப்பைபோடாதீர்கள் என

என் ஊனமுற்ற கவிதைகள்
அவர்களுக்கோ வெறும் குப்பையாய்

இனி நானோ ..
ஆரோக்கியமான கவிதைகள் வரும் வரை

சேமிக்க தொடங்கினேன்
குறையாய் பிறந்த என் கவிதை குழந்தைகளை
குப்பையாக்காமல் பொக்கிஷங்களாய்..

~அன்புடன் யசோதா காந்த் ~

வலி .....









நாட்களும் நொடிகளும்
 நகர மறுப்பதேன் ?

உண்ணாமல் ...நீர் அருந்தாமல் இருந்தும்
பசிப்பதில்லையே  ஏன் ?

உறவெல்லாம் உடன் இருந்தும்
தனிமை என்னை தழுவியதேன்?

இதய துடிப்பு சீராய் இருந்தும்
உடலும் மனமும் உயிரற்று இருப்பதேன்?

வாழ்க்கையில் மற்ற ஒன்றிலும்
தேடல் இல்லையே ஏன்?

கத்தியின்றி காயம்இன்றி
வலிகள் ஏன்?

காதலெனும் நோயினால்
உடலும் மனமும் உருக்குலைந்து போவதேன் ?

பெரும் பிணிக்கெல்லாம் தீர்வு உண்டே
காதல் நோய்க்கு மருந்து இல்லையே  ஏன் ?

ஏன் ஏன் ஏன் என்று
மனம் மருகி உருகி தவிப்பதேன் ?

~அன்புடன் யசோதா காந்த் ~

காதலர் தினம் ....









பூக்களும் காதல் பரிசுகளும்
குவிந்து கிடக்க

வாழ்த்துவோரும் வழங்குவோரும்
குழுமி இருக்க

நாகரீக காதலரோ
ஆடி பாட

கிராமத்து காதலரோ
திரை அரங்கு கோயில்குளம் தேட


புதிதாய் பூத்த காதலரோ
தவி தவிக்க

காதலில் வெற்றி கண்டவரோ
பெருமை கதை பேச

காதல் தோல்வி கொண்டவரோ
பார்க்கும் ஜோடிகளை வசை பாட

இனிதே தொடரட்டும்
இனிய காதலர் தினங்கள்

இன்புற வாழட்டும்
உண்மை காதலர்கள்

~அன்புடன் யசோதா காந்த் ~

அன்னை போல நீயும் .....







அன்பே என் தாயின் அணைப்பை
உன்னில் உணர்ந்தேனே
தாய் அவள் தவிப்பை
உன்னில் அறிந்தேனே

அன்னை அவள் பரிவை
உன்னில் கண்டேனே
அன்பான  அவள் கொஞ்சல்களை
உன்னிடம் அனுபவித்தேனே

அன்னை அவள் பொய் கோபம்
உன்னிடமும் அப்படியே
பாசமிகுதியால் சின்னசின்ன சண்டை
நம்மிலும் நடக்கிறதே

என் அன்பு காதலா
நீயும் என் தாயின் சாயலே
உன் மடிமீது தலைவைத்து
நானும் சிறு குழந்தை போலானேனே

`அன்புடன் யசோதா காந்த் ~

அன்புள்ள அம்மாவுக்கு ....









அம்மா உன்னை பார்க்க ஆசை
காதலின் வேகத்தில்
உன்னை மறந்தேனே
நானே தாயானபோதோ 
தவறுகளை உணர்ந்தேனே

என்னை விழிக்குள் 
வைத்தல்லவா நீ வளர்த்தாய்
எனக்கு பிடித்த உணவுகளையல்லவா
பார்த்து பார்த்து சமைத்தாய்

ஒரு நிமிடம் உன்னை மறந்து
என்னவர் பின் நடந்தேனே
உன்னை பிரிந்த பின்னும் 
ஒவ்வொரு நொடியும்
என் நினைவே நீயானாயே

உந்தன் வலியை எந்தன்
மகபேறு தன்னில் உணர்ந்தேனே
மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா
நீ வேண்டும் அம்மா மீண்டும் எனக்கு
நான் குழந்தையாய் மாறி
உன் புடவை தலைப்பால் 
முகம் மறைத்து விளையாட

நீ தலை தடவ உன் மடிமீதுறங்க
உன் கன்னம் உரசி முத்தமிட
என் இன்ப காலம் இனியும் வேண்டும்
அழைக்கிறேன் என் அன்பு அன்னையே ..

~அன்புடன் யசோதா காந்த் ~

சொல்மனமே சொல் ...








சொல்மனமே சொல்
நடப்பவை  யாவும் நன்மைக்கே  என்று

அச்சம் என்று எதுவும் இல்லை
தோல்விகள் கண்டு துவளுவதும் இல்லை
துயரங்களில் தோய்ந்து போவதும் இல்லை
எதிர் காலம் கருதி கலங்குவதும் இல்லை
மரணம் விரைவில் வரும் என தெரிந்தாலும்
எக்காலத்திலும் எந்த நேரத்திலும்

சரியோ ..
தவறோ
எதுவாயினும்
சொல் மனமே சொல்
நடப்பவை யாவும் நன்மைக்கே  என்று 

~`அன்புடன் யசோதா காந்த் ~

சாதி ....











ஆதியில் சாதி இருந்ததோ ?
மேல் மக்கள்  கீழ் மக்கள் உண்டோ ?
ஆண் பெண் இருபாலர்  அல்லவா?

அன்பென்ற தாய் பெற்ற பிள்ளைகள்
அனைத்தும் ஓர் குலம் அன்றோ ?

இறந்த உடல்கள் அனைத்தும்
பிணம்எனும் ஒற்றை பெயர்தானே ?

அறுத்தெறிவோம் ஜாதி எனும் ஆணி வேரை

பாரதி கண்ட கனவு
பாரதத்தில்  பலிகட்டுமே

உறுதி எடுப்போம் தீண்டாமை
இனி இல்லை என்று ..

அறிவில்லாதோர் காட்டும் இரட்டை குவளை
முறை அழிப்போம்

சாதி என்ற பெயரில்  அடிமைத்தனம்
ஆள்வோரை ஒழிப்போம்

வாழ்க பாரத அன்னை
வளர்க நம் பாரதம் ..


~அன்புடன் யசோதா காந்த் ~

கனவுகளே .....





இரவுகள் தோறும் எண்ணிலா   கனவுகள் ...


புரியாத இன்பம் தரும் கனவுகள்
அறியாத துக்கம் தரும் கனவுகள்

மோகினி பேய்களுடன் கைகோர்க்கும் திகில் கனவுகள்
பகைமை உணர்த்தும் பழிக்குப் பழி கனவுகள்

காதலை அள்ளி தெளிக்கும் காதலான கனவுகள்
உணர்வுகளை தூண்டும்  காம கனவுகள்

பொன்னும் பொருளும் கண்டு மயங்கும் ஆசை கனவுகள்
பாம்பும் தேளும் ஊரும்  கோர கனவுகள்

பிரிந்த சொந்தங்கள் சேரும் பாச கனவுகள்
ஏதேதோ முகமுடி இட்ட வேசகனவுகள்

குழந்தையாய் மனம் மகிழும் அற்புதகனவுகள்
உயிர் போகும் வலியுள்ள மரணகனவுகள்

விடிந்ததும் ...

மாறாமல் மனதில் நிலைத்திருக்கும் சில கனவுகள்
நினைத்து பார்த்தும் நினைவில் வராத பல கனவுகள்

~அன்புடன் யசோதா காந்த் ~

பூங்காற்று ...





வல்லரசுகள் இரண்டும்
   மோதிகொண்டும் 
கூட்டணி சேர்ந்துகொண்டும்
இடியும் மின்னலும் இல்லறத்திலேயே

வீட்டில் ஒளி தரும் தீபங்களோ
நிம்மதி  விளக்கினை
அணைக்கும் முயற்சியிலே
அடக்கும் முயற்சியில் மாமியார்களும்
சுதந்திரம் பேசிக்கொண்டே மருமகள்களும்
தன் இளமை பருவம் மறந்த பெரியவர்கள்
தன் தாயின் முதுமையை  மறந்த சிறியவர்கள்

தலைமுறை தலைமுறையாய்
தொடரும் குடும்ப பூகம்பங்கள்
மகளாய் மருமகளையும் தாயாய் மாமியாரையும்
எண்ணும் இல்லத்திலே என்றும்  வீசுமே 
மணமுள்ள பூங்காற்று ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

காதலான காதலன் ..









காதலில் உயிரானவன்  
உலகிற்கு உயர்வானவன்
சுற்றி இருப்போர்க்கு உறவானவன்
தித்திக்கும் தேனாய் இனிப்பவன்
ஊருக்கு உதவுபவன்
என்னில் நிழலானவன்
தன்னில் பாதி எனக்கு தந்தவன்
நீதி நெறி தெரிந்தவன்
என் நெஞ்சம் நிறைந்தவன்
தஞ்சம் என வந்தோர்க்கு தயை செய்பவன்
அநீதிக்கு குரல் கொடுப்பவன்
அழகில் ஆணழகன்
உன்னை நான் அடைய
என்ன வரம் பெற்றேனோ

   ~ அன்புடன் யசோதா  காந்த் ~  

தமிழன் ....






உலகெங்கும் கொடிகட்டி பறப்பவன் தமிழன்
ஊர் எல்லையில் ஆதரவின்றி கிடப்பவனும் தமிழன்

தீமையை  கண்டு குரல் கொடுப்பவன் தமிழன்
கொடுமைகள் கண்டும் கண் மூடிகொள்பவனும் தமிழன்

தலை நிமிர்ந்து நடை போடுபவன் தமிழன்
குட்ட குட்ட குனிந்து தளர்பவனும்  தமிழன்

புதுமைகள் பல படைப்பவன் தமிழன்
பழமையில் ஊறி திளைப்பவனும் தமிழன்

பாகுபாடின்றி சமபந்தி உண்பவன்  தமிழன்
ஜாதி வெறியில் இரத்தம் சிந்துபவனும் தமிழன்

அன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தமிழன்
இரக்கமற்ற சிலசெயல்கள் புரிபவனும் தமிழன்


எங்கும் தமிழ் எதிலும் தமிழென குரல் கொடுப்பவன் தமிழன் 
தமிழ் மறந்து பிறமொழியில் பேரம் பேசுபவனும் தமிழன்

தமிழனென்று  சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா

தமிழனுக்கென்று தனிக்குணம் உண்டென்று அறிந்து
நல் தமிழனாய் வாழ்வோம் ...
~ அன்புடன் யசோதா காந்த் ~ 

வெளிச்சம் ...






தெருவோர குருட்டு பெண்ணிடம்
முறைகேடாய் நயவஞ்சகன் ..
தறிகெட்ட அச்செயலால்
நிறைகுடமாய் முன் வயிறு ..
இருந்தும் அவளுக்குள் ஆனந்தம்
இனி கை பிடித்து தன்னை
நடத்தி செல்ல
உலகின் வெளிச்சம் தனக்கு தந்திட
தொப்புள் கொடி உறவு வருமென்று
மகப்பேருக்காய் காத்திருந்தாள்
மங்கை  அவள் ..
கறுப்பு வெள்ளை கனவுகளோடு
~அன்புடன் யசோதா காந்த் ~

ஆசைக்கு அழிவில்லை ...









ஆசைக்கு அழிவில்லை ...
ஆசைகளும் அடங்குவதில்லை

ஆசைகள் வேண்டும் நம் மனதிலே
அவை வாழ்கையை உயர்த்தும் உயர்வுகளிலே

ஆசைகள் வளர்ப்போம் இயன்றவரை
அது  ஈடேறும் நாள் வரும்வரையே

ஏணி படிகள் இன்றி ஏற்றங்கள் தொடலாம்
தயக்கமின்றி  தடைகளும்  தாண்டலாம்

ஆசை ஒன்றே ஆக்கத்திற்கு காரணம்
ஆசையில்லா மனிதனும் அரை  மனிதனே
~`அன்புடன் யசோதா காந்த் ~

விழிகளே ....






எனது விழிகளே ....
பலமுறை வேண்டியும்
பயனில்லை உங்களிடம்
மனதின் மர்மங்களை
அம்பலபடுத்தும் ஆயுதங்களே
அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை மறைத்து கொள்ளுங்களேன்


காதல் தோல்வியால் துவண்டதையும்
கவலைகள் என்னை கலக்கியதையும்
பயம் எனும் பேய் பாடாய் படுத்தியதையும்
  பிரிவுகள் பல வந்து பித்தாய் அலைந்ததையும் 

யாரும் அறியாது உள்ளுக்குள் உருகுவதையும்
விழிகள் நீங்கள்  அறிவிப்பதேனோ ?
 
வலிகள் பலவகை  வருவினும்
விழிநீர் வடிக்காதீர்கள்

விசும்பலுடன் விண்ணபிக்கிறேன்
எனது விழிகளே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

திருமண நாள் ...









இன்று ஏனோ
புதிதாய் கவிதைகள்
ஒன்றும் வரைய வில்லை
என் திருமண நாள் என்பதாலோ
மனம் பின்னோக்கி பறந்தது
என் வாலிப வயதும்
என் கணவரை காதலித்ததும்
காதலில் நாங்கள் மகிழ்ந்ததும்
பெற்றோரை எதிர்த்து
திருமணம் செய்ய துணிந்ததும்
என்னவரின் உறவினர்கள்
கலந்து ஆலோசித்தபின்
ஊரறிய திருமணம் ஆனதும்
எல்லாம் நேற்று நடந்தது போல்
ஓடிவிட்டது ..
முத்தான பதினேழு வருடங்கள்
அழகாய் இரண்டு குழந்தை செல்வங்களும்
நன்றி இறைவா
நாளும் நான் மறவேன்
வணங்குகிறேன்
வாழ்த்துங்கள் ...

~அன்புடன் யசோதா காந்த் ~

பிரியாத வரம் ...









இணைந்து நாம்  வாழ்ந்ததோ
முத்தான முப்பது வருடங்கள்


எனக்கு அவரும்
அவருக்கு நானும்  அன்பாய்


எல்லநேரங்களிலும் ஆதரவாய்
இணைபிரியா  நாட்கள்


மனைவி சொல்  கேட்டோ மகனோ
பிரித்துவிட்டான்
வெவ்வேறு முதியோர் இல்லங்களில்
இனி என்று சேர்வோமோ   ?


ஏக்கத்துடன் என் மனம்
 மரணத்தை நோக்கி ..


~`அன்புடன் யசோதா காந்த் ~

என் உயிர் நண்பனே ...





நண்பனே உன்னை வணங்குகிறேன்
நாளும் நீ வாழ வாழ்த்திடுவேன் 

அந்நிய அரபு தேசத்திலே
அடிமை வாழ்வினிடையே
அறிமுகமானேன் உன்னுடனே ...


அறியா மொழி பேசுவோர் நடுவினிலே
தாய் மொழியாம்
தமிழ் மொழி நம்மை சேர்த்ததே

என்ன தவம் நான் செய்தேனோ
உன்னை தோழனாய்  அடைந்ததிலே
உன் அருகாமை  என்னில் கிடைத்ததிலே
உலகே என் கைகளில் என உணர்ந்தேனே

என் இன்ப  துன்ப வேளையினிலே
நீ என் தெய்வம் என்றுணர்ந்தேனே
என்று தீர்ப்பேனோ இக்கடனை
நட்புக்கோர் இலக்கணமானாயே



வாயால் சொல்லி தீராதே
நீ செய்த நன்மைகளே
காவியம் படைக்க முயல்கின்றேன்
கருணை கொண்ட உன் மனதை


எதிரிகள் ஆயிரம் வந்திடினும் 
உன் துணையால்  வென்றிடுவேனே 
வாழிய வாழிய வாழியவே
என் உயிர் நண்பன் என்றென்றும் நீ
வாழியவே

~`அன்புடன் யசோதா காந்த் ~